மதுரை அ.தி.மு.க. மாநாடு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்
மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
சிவகாசி,
மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் அ.தி.மு.க.வின் முதல் மாநில மாநாடு மதுரையில் அடுத்த மாதம் 20-ந்தேதி நடக்கிறது.
இந்த மாநாட்டிற்கான ஆயத்த பணிகள் நடந்து வரும் நிலையில் ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, சண்முகம், தங்கமணி, வளர்மதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஸ்டாலினுக்கு பயம்
தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் பேசினர்.
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி:- நான் சென்ற பிறகும் அ.தி.மு.க. 100 ஆண்டுகள் நிலைத்து இருக்கும் என்று ஜெயலலிதா கூறினார். அதனை உறுதி செய்யத்தான் மதுரையில் அ.தி.மு.க. மாநாடு. ஸ்டாலினின் மோசமான ஆட்சியால் தி.மு.க. தனது செல்வாக்கை இழந்து விட்டது.
இதனால் அடுத்து வர உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்த பயம் ஸ்டாலினுக்கு வந்துவிட்டது. மதுரை மாநாடு வெற்றி மாநாடாக அமைய வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும். மதுரை மாநாட்டில் 20 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள். பிரதமர் மோடியின் நன்மதிப்பை எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார். எனவே மீண்டும் மோடி பிரதமர் ஆவார்.
சோதனை காலம்
நத்தம் விஸ்வநாதன்: அ.தி.மு.க.வுக்கு சோதனை காலங்களில் எல்லாம் விருதுநகர் மாவட்டம் கைதூக்கி விட்டுள்ளது. மதுரை மாநாட்டை வெற்றி அடைய செய்வதில் விருதுநகர் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் முக்கிய பங்கு இருக்க வேண்டும். குடும்பம், குடும்பமாக மாநாட்டிற்கு வர வேண்டும்.
செல்லூர் ராஜூ:- 17 லட்சம் தொண்டர்கள் இருந்த அ.தி.மு.க.வில் தற்போது 2 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். அ.தி.மு.க.விற்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்.
ஆயிரம் ஏக்கர்
ஆர்.பி.உதயகுமார்:-
மதுரை மாநாட்டிற்கு 100 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இங்கு கூடி உள்ள கூட்டத்தை பார்க்கும் போது 1,000 ஏக்கர் இடம் தான் சரியாக இருக்கும். அ.தி.மு.க. மாநாடு குறித்து வெளி மாநில தலைவர்கள் விவாதித்து வருகிறார்கள்.
செங்கோட்டையன்:- 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை பிடித்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார். அதற்கு அடித்தளமிடத்தான் மதுரையில் மாநாடு. விருதுநகர் மாவட்ட தொண்டர்கள் மாநாட்டில் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
இதேபோல் அ.தி.மு.க. மூத்த நிர்வாகி நெல்லை கருப்பசாமி பாண்டியன், மதுரை ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம் உள்பட பலர் பேசினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், இன்பத்தமிழன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா, மாநில நிர்வாகி வேண்டுராயபுரம் சுப்பிரமணியம் மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.