சார்பதிவாளர் அலுவலகத்தில் அங்கீகாரம் பெறாத மனைகளை பதிவு செய்ய தடை கோரி வழக்கு பதிவுத்துறை அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்


சார்பதிவாளர் அலுவலகத்தில்  அங்கீகாரம் பெறாத மனைகளை பதிவு செய்ய தடை கோரி வழக்கு பதிவுத்துறை அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 3 March 2023 7:15 PM GMT (Updated: 3 March 2023 8:06 PM GMT)

சார்பதிவாளர் அலுவலகத்தில் அங்கீகாரம் பெறாத மனைகளை பதிவு செய்ய தடை கோரி வழக்கு பதிவுத்துறை அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் விடுத்தது.

மதுரை


திண்டுக்கல் மாவட்டம் ஒய்.எம்.ஆர்.பட்டியைச் சேர்ந்த ரவி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்யக்கூடாது என்று 2016-ம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. ஆனால் அதன்பின்பும், திண்டுக்கல் நாகல்நாயக்கன்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி லே அவுட்களை பயன்படுத்தி அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஒரு லே அவுட்டை பயன்படுத்தி, சம்பந்தமே இல்லாத வீட்டுமனைகளை பதிவு செய்கின்றனர். பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் கட்டப்பட்டு உள்ள வீடுகளை மறைத்து, காலி மனைகள் என இந்த அலுவலகத்தில் பதிவு செய்து கொடுக்கின்றனர்.

இதேபோல மாசிலாமணிபுரம், டாக்டர் கோவிந்தராஜ்நகர், மாலைப்பட்டி, அச்சராஜக்காபட்டி, ஜம்புளியம்பட்டி, பசுமை நகர், சர்வேயர் நகர், கே.எஸ்.ரவி நகர், சாஸ்திரி நகர் உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்டு உள்ள வீடுகளை ஆய்வு செய்தாலே உண்மை தெரியவரும். மேலும் இங்கு சம்பந்தமே இல்லாத பட்டாக்களை வைத்து நிலத்தை பதிவு செய்கின்றனர். தனிநபர்கள் இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரம் செய்து வருகின்றனர்.

இதனால் அரசுக்கு ஏராளமான இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அங்கீகாரம் பெறாத மனைகளை நாகல்நாயக்கன்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து பதிவுத்துறை அதிகாரிகள், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.


Next Story