மாம்பழ ஜூஸ் தொழிற்சாலை அமைக்க வேண்டும்-குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை


மாம்பழ ஜூஸ் தொழிற்சாலை அமைக்க வேண்டும்-குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை
x

வேலூர் மாவட்டத்தில் மாம்பழ ஜூஸ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் மாம்பழ ஜூஸ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் கலாநிதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்து கூறினர்.

அப்போது அவர்கள் பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் தென்னை விவசாயிகள் பலர் வருமானமின்றி உள்ளனர். எனவே ரேஷன் கடைகளில் பாமாயிலுடன் தேங்காய் எண்ணையும் வழங்க வேண்டும். கள் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். குடியாத்தத்தில் கால்நடை சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் மற்றும் பாலாற்றின் கரையோரம் சமூக காடுகள் அமைக்க வேண்டும்.

மாம்பழ ஜூஸ் தொழிற்சாலை

வேலூர் மாவட்டத்தில் ஏராளமான மா மரம் வளர்க்கும் விவசாயிகள் உள்ளனர். அவர்கள் மாம்பழங்களை சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஜூஸ் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு தமிழக மாம்பழத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது இல்லை. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். எனவே மா ஜூஸ் தொழிற்சாலை அமைக்க வேண்டும். மா மரத்தில் நோய்தாக்குதல்களை கட்டுப்படுத்த வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தால் விவசாயம் அழியும் நிலையில் உள்ளது. விவசாய பணிக்கு 100 நாள் பணியாளர்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரணாம்பட்டு சாரங்கல் பகுதியில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரணாம்பட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

மணல் கொள்ளை

விவசாயத்துக்கு கூலி அதிகமாக கொடுக்க வேண்டி உள்ளது. ஆனால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் விளைபொருட்களின் விலை உயரவில்லை. பத்தரபள்ளி மலட்டாற்றில் மணல் கொள்ளை நடக்கிறது. அதை தடுக்க வேண்டும். ஒய்யாத்தூர் ஏரியிலும் மணல் கொள்ளை அதிகளவில் நடைபெறுகிறது.

கந்தனேரி மணல் குவாரியில் மணல் கட்டுப்பாடு இல்லாமல் எடுக்கப்படுகிறது. 20 அடி ஆழத்துக்கும் மேல் மணல் எடுக்கின்றனர்.

குடியாத்தத்தில் பாக்கம் ஏரியில் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?, அப்படியானால் எவ்வளவு மண் எடுக்கப்பட வேண்டும்? ஆனால் அங்கு கரையை உடைத்தும் மண்ணை எடுத்துச் செல்கின்றனர்.

பள்ளிகொண்டாவில் கார்கில் போரில் பங்கேற்ற ராணுவவீரருக்கு பட்டா தொடர்பான மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் அவரை அலைக்கழிக்கின்றனர்.

உரிய நஷ்டஈடு

வேலூரில் சாலையில் திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு தொல்லை உள்ளது. குப்பைகளை உரமாக்கும் திட்டத்தை மாவட்டம் முழுவதும் செயல்படுத்த வேண்டும். வாழை மரம் சாய்ந்தால் அதற்கு 5 ரூபாய் 50 காசு நஷ்ட ஈடாக வழங்குகிறார்கள். அது போதுமான நஷ்டஈடு கிடையாது. பாலாற்றில் தரைமேல் தடுப்பணைகள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி பதிலளித்து பேசினார். அப்போது அவர், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சில கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும். பேரணாம்பட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொள்ள வேண்டும். பேரணாம்பட்டில் யானை அகழிகளை தூர்வார வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் என்றார். மேலும் விவசாயிகளின் கேள்விகளுக்கு பிறதுறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.

அதிகாரிகள் பங்கேற்கவில்லை

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகள் குறித்து பேசினர். அப்போது அதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் அளிக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி கூறினார். ஆனால் கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்குபெறவில்லை. ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்துள்ளார்களா? என அவர் விசாரித்தபோது அந்த துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கு பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அடுத்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.



Next Story