200 காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு


200 காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு
x

200 காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.

மதுரை

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அதில் மாடுகள் முட்டியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

மஞ்சுவிரட்டு போட்டி

கொட்டாம்பட்டி அருகே நெல்லுகுண்டுபட்டியில் அழகுநாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டும், மழைபெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டது. கிராமத்தின் சார்பில் மேளதாளத்துடன் ஜவுளிகள் ஊர்வலமாக எடுத்து வந்து தொழுவத்தில் சிறப்பு பூஜைகள் செய்து, மஞ்சுவிரட்டில் பங்கேற்க வந்த காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது.

இதையடுத்து அங்குள்ள தொழுவத்தில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அப்போது காளைகள் மைதானத்தில் சீறிப்பாய்ந்து சென்றன.

5 பேர் காயம்

இந்த காளைகளை மாடுபிடி வீரர்களும், இளைஞர்களும் துரத்து சென்று அடக்க முயன்றனர். அதில் சில காளைகள் பிடிபட்டன. சில காளைகள் பிடிக்க முயன்ற காளையர்களை பந்தாடியது. இந்த போட்டியின் போது மாடுகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 5 பேர் காயம் அடைந்தனர்.

அவர்களை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர்.



Next Story