மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர்


மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர்
x

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவையொட்டி பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடங்கினர்.

கரூர்

விரதம் தொடங்கிய பக்தர்கள்

கரூர் நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இப்பகுதி பொதுமக்களுக்கு காவல் தெய்வமாகவும், மழை தரும் தெய்வமாகவும் போற்றப்பட்டு வருகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா விமர்சையாக நடைபெறும்.

அதேபோல் இந்தாண்டு வைகாசி திருவிழா கடந்த 14-ந்தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ெதாடர்ந்து 19-ந்தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. நேற்று நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து காப்பு கட்டிக்கொண்டு தங்களது விரதத்தை தொடங்கினர். பின்னர் மாரியம்மன் பயபக்தியுடன் வணங்கி சென்றனர்.

கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி

29-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டமும் நடைபெற உள்ளது.

மேலும் 28, 29, 30, 31-ந்தேதிகளில் மாவிளக்கும், பால்குடமும் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்தி கடன்கள் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி 31-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது.

பிரமாண்ட ராட்டினங்கள்

கம்பம் நடுதல் நிகழ்ச்சியில் இருந்து தினமும் திரளான பக்தர்கள் பசுபதி அமராவதி ஆற்றில் புனிதநீராடி விட்டு, அங்கிருந்து தீர்த்தம் எடுத்து வந்து கம்பத்திற்கு ஊற்றி அம்மனை வழிபட்டு சென்று வருகின்றனர்.

தற்போது அமராவதி ஆறு நீரின்றி வறண்டு காணப்படுவதால் பக்தர்கள் வசதிக்காக ஆற்றில் குளித்து புனித நீராடும் வகையில் அங்கு நீரூற்றுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் பக்தர்கள் தினமும் தங்களது குழந்தைகளுடன் அதிகமாக வருகின்றனர். இதனால் குழந்தைகளின் வசதிக்காக பிரமாண்ட ராட்டினங்கள் அமைப்பதற்காக விளையாட்டு உபகரணங்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


Next Story