மாதேவி மங்கையர்கரசியார் கோவில் கும்பாபிஷேக விழா
பட்டிவீரன்பட்டியில் மாதேவி மங்கையர்கரசியார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
பட்டிவீரன்பட்டியில் மாதேவி மங்கையர்கரசியார் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த 2-ந்தேதி முதல் கால வேள்வி பூஜை கணபதி வழிபாடு, திருமுறை வழிபாடு, 2-ம் கால வேள்வி பூஜை நடைபெற்றது. திருவண்ணாமலை, திருமறைகாடு முதலிய திருத்தல திருமறை பதிகங்கள் பாடி, இறைவன் திருச்செவிக்கு விண்ணப்பம் செய்தலும், 3-ந்தேதி 3-ம் கால வேள்வியாக திருவாசகம், திருத்தொண்டர் புராணம், பதினோராம் திருமுறை பாடப்பட்டு பூஜைகள் நடந்தன. நேற்று 4-ம் கால வேள்வியைத் தொடர்ந்து கலச தீர்த்தங்கள் புறப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க மூலஸ்தன கோபுர கலசத்தில் பல்வேறு நதிகளிலிருந்து கொண்டு வந்த புனிதநீரை ஊற்றி சிவச்சாரியர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாதேவிமங்கையர்கரசியார் நாயன்மார் பண்ணிசை திருக்கூட்டம் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர். இதுகுறித்து விழாக்குழுவினர் கூறுகையில், 63 நாயன்மார்களில் ஒருவரான மாதேவிமங்கையர்கரசியாருக்கு தமிழ்நாட்டில் முதன்முறையாக பட்டிவீரன்பட்டியில் தனிக்கற்கோவில் கட்டப்பட்டுள்ளது என்றனர்.