முதல் மாவட்டமாக மயிலாடுதுறை வரவேண்டும்


முதல் மாவட்டமாக மயிலாடுதுறை வரவேண்டும்
x

ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்குவதில் முதல் மாவட்டமாக மயிலாடுதுறை வர வேண்டும் என கலெக்டர் மகாபாரதி அறிவுறுத்தினார்.

மயிலாடுதுறை


ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்குவதில் முதல் மாவட்டமாக மயிலாடுதுறை வர வேண்டும் என கலெக்டர் மகாபாரதி அறிவுறுத்தினார்.

ஆய்வு கூட்டம்

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான ரேஷன் கடை விற்பனையாளருக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.

பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை பொதுமக்களுக்கு வழங்கியதில் தமிழகத்திலேயே மயிலாடுதுறை மாவட்டம் முதல் மாவட்டம் ஆகும். அதனால் மற்ற மாவட்டங்கள் அனைத்தும் நமது மயிலாடுதுறை மாவட்டத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

மற்ற மாவட்டங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக நமது மாவட்டம் விளங்குகிறது. இதற்கு காரணம் விற்பனையாளரான நீங்களே ஆவீர்கள். மாவட்ட கலெக்டர் என்ற முறையில் நான் ஆலோசனை மட்டுமே வழங்கினேன். அதை நீங்கள் முழு கவனத்தில் வைத்து கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக செய்து நமது மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நற்பெயரை வாங்கி கொடுத்துள்ளீர்கள். அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஸ்மார்ட் கடையாக மாற்ற நடவடிக்கை

நான் கூட்டுறவுத்துறையில் சிறப்பு அதிகாரியாக சில ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்துள்ளேன். அதனால் உங்களுடைய சிரமம் மற்றும் பிரச்சினைகள் எனக்கு நன்றாக தெரியும். எனது ஒரே நோக்கம் மயிலாடுதுறை மாவட்டத்தை அனைத்துத் துறையிலும் முதன்மையாக செயல்படுத்தி தமிழ்நாட்டிலேயே முதல் மாவட்டமாக கொண்டுவருவது ஆகும். மயிலாடுதுறை மாவட்டத்தில் 427 ரேஷன் கடைகள் இன்னும் பழைய நடைமுறையிலேயே உள்ளது. மாவட்டத்தில் எல்லா ரேஷன் கடையையும் ஸ்மார்ட் கடையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நான் அடிக்கடி ரேஷன் கடைக்கு ஆய்வு மேற்கொள்வேன்.

ரேஷன் கடையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். காலாவாதியான பொருட்களை அப்புற படுத்தவேண்டும். விற்பனையாளர்கள் பொதுமக்களுக்கு சரியான எடை அளவில் பொருட்களை கொடுக்க வேண்டும்.

முதல் மாவட்டமாக வரவேண்டும்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திலிருந்து சரியான எடை அளவில் பொருட்கள் இறக்கப்படுகிறதா என்பதை கவனிக்கவேண்டும். இன்னும் 3 மாதத்தில் மயிலாடுதுறை மாவட்டம் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்குவதில் முதல் மாவட்டமாக வரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மயிலாடுதுறை கூட்டுறவு நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை கட்டுபாடற்ற பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்து அரசுக்கு வருவாய் ஈட்டித் தந்த 10 விற்பனையாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.

கூட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாளவிநாயகன் அமல்ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி, துணைப்பதிவாளர் அண்ணாமலை, சரக துணைப்பதிவாளர் ராஜேந்திரன், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநர் இளங்கோவன், கூட்டுறவு நகர வங்கி மேலாண்மை இயக்குனர் செல்வராஜ் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவு சார்பதிவாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story