டி.டி.வி தினகரனுடன் சந்திப்பு: ஓ.பன்னீர் செல்வம் மீது வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் அதிருப்தியா....?
ஓ.பன்னீர் செல்வம் தீவிர ஆதரவாளர்களும், முக்கிய நிர்வாகிகளான வைத்தியலிங்கம், ஜேசிடி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் டிடிவி தினகரனுடனான சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
சென்னை
கடந்த 2017ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய போது அவருக்கு வலது கரமாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் கே.பி.முனுசாமி, செம்மலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள். ஆனால், அன்று வைத்தியலிங்கம் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்தார். பின்னர், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்தது. இந்நிலையில், ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாகவும், எடப்பாடி பழனிசாமி தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
அன்று ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்திய போது வலது கரமாக இருந்து வந்த கே.பி.முனுசாமி உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி ஆதரவாக உள்ளனர். அதேபோல், எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்து வந்த வைத்தியலிங்கம் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், வைத்தியலிங்கம், ஜேசிடி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு, தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. இதனையடுத்து, அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த எந்த நேரத்திலும் டிடிவி.தினகரன் மற்றும் சசிகலாவை ஓ.பன்னீர் செல்வம் சந்திக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருந்தன. இதனை பல பேட்டியில் ஓ.பன்னீர் செல்வமும் கூறிவந்தார்.
இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் திடீரென அடையாறில் உள்ள அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இல்லத்திற்கு சென்று சந்தித்தனர்.
நேற்றைய சந்திப்பின் போது ஓ.பன்னீர் செல்வம் தீவிர ஆதரவாளர்களும், முக்கிய நிர்வாகிகளான வைத்தியலிங்கம், ஜேசிடி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
தேனி மாவட்ட செயலாளர் சையது கான் மட்டுமே உடன் இருந்தார். இதனால், இவர்கள் ஓபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
ஓ.பன்னீர் செல்வம் டி.டி.வி. தினகரன் இணைந்ததால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
சசிகலாவை ஒருபோதும் சேர்க்க மாட்டோம் என்று அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது அவரை சின்னம்மா என்று அழைத்து வருகிறார். எந்த சூழ்நிலையிலும் அ.தி.மு.க.வுக்குள் ஓ.பன்னீர்செல்வம் வர முடியாது.
ஓ.பி.எஸ்.சுடன் உள்ள மற்ற நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். ஜே.சி.டி. பிரபாகர், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் அதிருப்தியுடன் உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, தினகரன் தவிர வேறு யார் வந்தாலும் அ.தி.மு.க.வில் சேர்ப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.