எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவுதிட்டத்தை இன்றும் உலகமே பாராட்டி வருகிறது


எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவுதிட்டத்தை இன்றும் உலகமே பாராட்டி வருகிறது
x

ஏழை, எளிய குழந்தைகளுக்கு எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை இன்றளவும் உலகமே பாராட்டி வருகிறது என அருப்புக்கோட்டையில் நடைபெற்ற விழாவில் சைதை துரைசாமி பேசினார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,


ஏழை, எளிய குழந்தைகளுக்கு எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை இன்றளவும் உலகமே பாராட்டி வருகிறது என அருப்புக்கோட்டையில் நடைபெற்ற விழாவில் சைதை துரைசாமி பேசினார்.

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் எம்.ஜி.ஆர். பேரவை சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆலோசகர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பொன்னுத்துரை, துணைச்செயலாளர் வஞ்சிவேந்தன், துணைத்தலைவர் மலையரசு பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் லியாகத் அலிகான் சிறப்புரையாற்றினார். விழாவில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி கலந்து கொண்டு பேசினாா். அப்போது அவர் கூறியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தென் மாவட்ட மக்களின் முழு அன்பை பெற்றவர். எம்.ஜி.ஆரை போன்ற மாமனிதர் இந்த மண்ணில் இன்னும் தோன்றவில்லை. இனிமேலும் தோன்ற போவதில்லை.

இரட்டை இலை

சாதி மதங்களை கடந்து அனைத்து மக்கள் மனதிலும் இடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர். உலகம் முழுக்க எந்த ஒரு சினிமாவும் சந்திக்காத சோதனைகளை, நெருக்கடிகளை சந்தித்து திரைப்படத்தில் வெற்றி கண்டவர் அவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான உலகம் சுற்றும் வாலிபன் என்ற திரைப்படமே அ.தி.மு.க. என்ற கட்சிக்கு உரம் போட்டது. இரட்டை இலை எனும் வெற்றி சின்னம் கிடைப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட தருணத்தில் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டு அவரின் ரசிகர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களும் தனிக்கட்சி தொடங்குமாறு கொடுத்த ஆதரவின் காரணமாக அ.தி.மு.க. இயக்கம் உருவானது. திண்டுக்கல் தொகுதி மக்களவைக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தார்.

இடைத்தேர்தல்

கட்சி ஆரம்பித்த 7 மாத காலத்தில் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனை சமாளிக்க வாக்குப்பதிவுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வெளியிடுவதாக அறிவித்தார். எம்.ஜி.ஆர். என்னுடைய திரைப்படம் திரையிடப்படுவதால் தியேட்டர்களுக்கு என்ன சேதம் ஏற்பட்டாலும் சொத்துக்களை விற்றாவது உங்களது இழப்பை ஈடு செய்வேன் என்று வாக்குறுதி அளித்தார்.

அவர் உழைத்து சம்பாதித்த பணம் அனைத்தையும், மண்ணுக்கும் மக்களுக்கும் விதைத்து விட்டுப் போய் உள்ளார். அதனாலேயே மக்களின் உள்ளத்திலும், மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

சத்துணவு திட்டம்

மக்களால் உருவாக்கப்பட்ட இந்த மாபெரும் இயக்கம் அன்று முதல் இன்று வரை அ.தி.மு.க. தொண்டர்கள் எம்.ஜி.ஆரை நினைத்து தியாகம் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கான ஆட்சி நடைபெறாத காரணத்தினால் மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்தார். மக்கள் நலனை கருத்தில் கொண்டு எம்.ஜி.ஆர். அரியணை ஏறியவுடன் தனியாரிடமிருந்த ரேஷன் கடைகளை மாற்றி 22 ஆயிரம் ரேஷன் கடைகளை திறந்து வைத்து தமிழக மக்களுக்கு ஒரு வேளை உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரேஷன் கடையை கொண்டு வந்தார்.

ஏழை, எளிய குழந்தைகள் ஊட்டச்சத்து பெற வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வந்த திட்டம் தான் சத்துணவு திட்டம். தற்போது இந்த திட்டத்தை இன்றும் உலக அளவில் பாராட்டி பேசப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக எஸ்.எஸ். அலி வரவேற்றார். முடிவில் நாகராஜன் நன்றி கூறினார்.


Next Story