மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் மினி பஸ்கள்


மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் மினி பஸ்கள்
x

கும்பகோணம்- சுவாமிமலை இடையே மாற்று வழித்தடத்தில் மினி பஸ்கள் இயக்கப்படுவதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணம்- சுவாமிமலை இடையே மாற்று வழித்தடத்தில் மினி பஸ்கள் இயக்கப்படுவதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மினி பஸ்கள்

கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்கு 5-க்கும் மேற்பட்ட மினிபஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு வளையப்பேட்டை, மாங்குடி, கோணக்கரை வழியாக சுவாமிமலைக்கு செல்வது வழக்கம்.

அதே வழித்தடத்தில் மீண்டும் கும்பகோணத்துக்கு மினி பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்கள் சில நேரங்களில் வரையறுக்கப்பட்ட வழித்தடத்தில் இருந்து விலகி மாற்று வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இதனால் கோணக்கரை, மாங்குடி, வளையப்பேட்டை வழித்தடத்தில் உள்ள கிராமங்களில் இருந்து கும்பகோணத்துக்கு செல்ல முடியாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கிராம மக்கள் வேதனை

சில நேரங்களில் பஸ் வரும் என வெகு நேரம் காத்திருந்து மக்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். கிராமப்புறங்கள் வழியாக அரசு பஸ் போக்குவரத்தும் இல்லை. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். அலுவலகம், பள்ளி நேரங்களில் பஸ் வராமல் மக்கள் தினசரி அவதிப்படும் சூழல் உள்ளது. எனவே கிராம மக்கள் பயன் அடையும் வகையில் மினி பஸ்களை அதற்குரிய வழித்தடத்தில் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சுந்தரவிமலநாதன் கூறியதாவது:-

தனியார் மினி பஸ்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தை விட்டு வேறு வழித்தடத்தில் தன்னிச்சையாக விதிகளுக்கு புறம்பாக இயக்கப்படுவதால் விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளியூர்களில் இருந்து சுவாமிமலை கோவிலுக்கு வந்து செல்கின்ற பக்தர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

நடவடிக்கை

அதிகாலை நேரத்திலும் இரவு 10 மணிக்கு பிறகும் இயக்கப்பட வேண்டிய தனியார் மினி பஸ்கள் முறைப்படி இயக்கப்படவில்லை. எனவே இதில் அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி வலையப்பேட்டை வழியாக சுவாமிமலைக்கு வந்து செல்ல வேண்டிய மினி பஸ்களை உரிய வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முறை தவறி இயக்கப்படும் தனியார் பஸ்கள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story