ஒகேனக்கல் சுற்றுலா தலம் சர்வதேச தரத்தில் மேம்படுத்த நடவடிக்கைஅமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி


ஒகேனக்கல் சுற்றுலா தலம் சர்வதேச தரத்தில் மேம்படுத்த நடவடிக்கைஅமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 5 March 2023 7:00 PM GMT (Updated: 5 March 2023 7:00 PM GMT)
தர்மபுரி

ஒகேனக்கல் சுற்றுலா தலம் சர்வதேச தரத்தில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

மேம்படுத்தும் பணி

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலம் ரூ.17.57 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிக்கான பூமிபூஜை கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு சுற்றுலா தலங்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை சர்வதேச அளவில் மேம்படுத்த தமிழக அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. இதன் அடிப்படையில் சுமார் ரூ.17 கோடியே 57 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

பரிசல் நிறுத்துமிடம்

முதல் கட்டமாக ரூ.11.33 கோடியில் பணிகள் நடக்கிறது. 2-வது கட்டத்தில் மீதமுள்ள நிதியில் திட்டப்பணிகள் நடக்கிறது. இதற்காக 3.10 ஏக்கர் நிலம் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நுழைவுவாயில் பார்வையாளர் மாடம், பரிசல் நிறுத்துமிடம், எண்ணெய் குளியலுக்கான இடங்கள், உடை மாற்றும் அறை மற்றும் பாதுகாப்புடன் குளிக்க வசதி ஏற்படுத்துதல், டிக்கெட் கவுண்ட்டர், பரிசல் சென்றடையும் பகுதி, மசாஜ் பகுதி, ஆழ்துளை கிணறு, உணவகம், சொகுசு நடைபாதை, எண்ணெய் கழிவு சுத்திகரிப்பு நிலையம், காட்சி கோபுரம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

உபரிநீர் திட்டம்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 2-வது தி்ட்டம் ரூ.4,500 கோடியில் முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் தர்மபுரி மாவட்டம் விவசாயத்தில் செழிப்படையும். தர்மபுரி சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் விரைவில் நிறைவேறும். தர்மபுரி மாவட்ட வளர்ச்சியில் தமிழக முதல்- அமைச்சர் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ஜி.கே. மணி எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, பென்னாகரம் ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன். மாவட்ட சுற்றுலா அலுவலர் கதிரேசன், தாசில்தார் சவுகத் அலி, வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story