வடபழனி முருகன் கோவிலில் ரூ.25 லட்சத்தில் சோலார் மின்நிலையம் -அமைச்சர் திறந்துவைத்தார்


வடபழனி முருகன் கோவிலில் ரூ.25 லட்சத்தில் சோலார் மின்நிலையம் -அமைச்சர் திறந்துவைத்தார்
x

வடபழனி முருகன் கோவிலில் ரூ.25 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்நிலையத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.

சென்னை

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வடபழனி முருகன் கோவில் வளாகம் முழுவதும் ரூ.25 லட்சம் மதிப்பில் 50 கிலோ வாட் திறன் கொண்ட 75 சோலார் மின் தகடுகள் கொண்ட சோலார் மின்நிலையம் திறப்பு விழா, கந்தர் அனுபூதி மண்டபத்தில் நேற்று நடந்தது.

இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ேசகர்பாபு திறந்து வைத்தார். அறநிலையத்துறை கமிஷனர் முரளிதரன், கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், எம்.எல்.ஏ.க்கள் வேலு, கருணாநிதி, சிட்டி யூனியன் வங்கி தலைவர் காமகோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருக்கோவில் செயலி திட்டம்

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓரிரு நாட்களுக்கு முன்பு 48 முதுநிலை கோவில்களின் பிரசாதங்கள் நாடு முழுவதும் தபால் மூலம் அனுப்பும் திட்டமும், 50 கோவில்களின் அன்றாட பூஜைகள், இந்து சமயத்தை சார்ந்த அனைத்து சொற்பொழிவுகளையும் அனைவரும் கேட்கும் வகையிலான 'திருக்கோவில்' என்ற செயலி திட்டம் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது வடபழனி முருகன் கோவிலில் சோலார் மின்நிலையம் ரூ.25 லட்சத்தில் அமைக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கோவிலின் முழு மின்சார தேவையையும் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள சோலார் மின் சக்தி மூலம் பெறப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் முழுவதுக்கும் சூரிய மின் சக்தி மூலம் மின்சார தேவை பூர்த்தி செய்யும் முதல் கோவிலாக வடபழனி முருகன் கோவில் உள்ளது. மதியம் கோவில் நடை மூடப்பட்ட பிறகு உற்பத்தியாகும் மின்சாரம் கோவிலுக்கு பயன்படுத்த வாய்ப்பில்லை.

எனவே இந்த மின்சாரம், மின்சார வாரியத்துக்கு வழங்கப்படும். அதன் மூலம் வருமானம் கிடைக்கிற வகையிலான கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம். படிப்படியாக அனைத்து கோவிலிலும் சோலார் மின் சக்தி நிலையம் நிறுவப்படும்.

தனி வரிசை

கோவிலில் தரிசனம் செய்ய வரும் 60 வயதை கடந்தவர்களுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடபழனி முருகன் கோவிலில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் விரைவாக சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும்.

இன்று (அதாவது நேற்று) ஒரு நாள் மட்டும் 'திருக்கோவில்' செயலி மூலம் 65 பேர் பிரசாதம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த திட்டத்தை கண்காணிக்க கூடுதல் கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மின்சார கட்டணம் ரூ.5 லட்சம் சேமிப்பு

இந்த சோலார் மின் சக்தி நிலையம் நாளொன்றுக்கு 150 முதல் 165 யூனிட் வரை மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் உருவாக்கி கொடுக்கிறது. கோவிலில் பகலில் பயன்படுத்தப்படும் அனைத்து மின்சார தேவைகளுக்கும் இந்த சோலார் மின் நிலையம் மூலம் மின்சாரம் பெற முடியும். இதன் மூலம் கோவிலுக்கு மாதம் ரூ.38 ஆயிரத்து 550 வீதம் ஆண்டுக்கு ரூ.4.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை மின்சார கட்டணம் சேமிக்க வாய்ப்பு உள்ளது.

பகலில் கோவில் நடை சாற்றும் நேரமான பகல் 12.30 மணி முதல் மாலை 4 மணி வரை கோவிலில் மின்சாரம் பயன்படுத்தப்படாத நேரத்தில் உற்பத்தியாகும் சூரிய ஒளி மின்சாரம் ஒரு நாளைக்கு சுமார் 120 யூனிட் வரை மின்சார வாரியத்துக்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதத்துக்கு சுமார் ரூ.10 ஆயிரம் வரை கோவிலுக்கு வருமானம் வரப்பெறும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.


Next Story