கலை, என்ஜினீயரிங் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு அமைச்சர் அறிவிப்பு


கலை, என்ஜினீயரிங் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு அமைச்சர் அறிவிப்பு
x

சி.பி.எஸ்.இ. மாணவர்கள் பாதிக்காத வகையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சென்னை,

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 7-ந்தேதி (நேற்று முன்தினம்) விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல், என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு வருகிற 19-ந்தேதி கடைசிநாளாக உள்ளது. சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வந்துவிட்டால், இந்த தேதியில் மாற்றங்கள் இருக்காது என்று ஏற்கனவே சொல்லி இருந்தோம். ஆனால் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் இப்போது வரை வெளியாகவில்லை. எப்போது வெளியாகும் என்று கூட தெரியாத நிலை இருக்கிறது.

ஆகவே சி.பி.எஸ்.இ.-ல் படித்த மாணவர்கள் என்ன படிப்பது? படிப்புகளுக்கு எங்கு விண்ணப்பிப்பது? என்று தெரியாமல் திணறிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு அதன்பிறகு 5 நாட்கள் வரை அவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக, அதுவரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. அந்த நாட்கள் வரை சி.பி.எஸ்.இ.-ல் படித்தவர்கள் மட்டுமல்லாது, மற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த கால அவகாசம் அரசு, தனியார் கல்லூரிகள் என அனைவருக்கும் பொருந்தும்.

தரத்தை உயர்த்தவேண்டும்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இருக்கும் இடங்களை விட அதிக எண்ணிக்கையில் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். ஏற்கனவே கூடுதலாக 15 சதவீதம் சேர்க்கையை அதிகரித்து கொள்ள அனுமதி இருந்ததை, முதல்-அமைச்சர் 25 சதவீதமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டே இது நடைமுறைக்கு வந்தது. உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பதான் இடங்களை ஒதுக்கி வருகிறோம்.

அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான தரம் இருக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். தரமில்லாத கல்லூரிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று ஆய்வு நடத்தி உத்தரவிடுகிறோம். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இதை மேற்கொள்ள முதல்-அமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார். அதன் அடிப்படையில்தான் என்ஜினீயரிங் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளது. முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்கள் முதலில் ஆன்லைனில் தேர்வை நடத்த கேட்டார்கள். ஆனால் ஆப்லைனில் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி முடிவு குறைவாகியிருப்பது இயற்கைதான். மாணவர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அடுத்து வரும் செமஸ்டர்களில் இவர்கள் அனைவரும் தேறிவிடுவார்கள்.

2 லட்சம் மாணவிகள் விண்ணப்பம்

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கான தேதி இறுதி செய்யப்படுவது, அண்ணா பல்கலைக்கழகமும், கவர்னரும் கலந்து பேசிய பிறகு தான். மற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு தேதி கொடுக்கும் கவர்னர், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மட்டும் கொடுக்காதது ஏன்? என அவரைத்தான் கேட்கவேண்டும்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 மாணவிகளுக்கு வழங்கும் திட்டத்துக்கு இதுவரை 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்து இருக்கின்றனர். அதற்கான பரிசீலனை நடந்து கொண்டு இருக்கிறது. கல்லூரிகளில் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கிய ஒரு மாத காலத்தில் இந்த திட்டம் தொடங்கப்படும். டான்செட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டன. விரைவில் அதற்கான கலந்தாய்வு நடத்துவதற்கு தேதிகளும் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், கல்லூரிக்கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தார்.


Next Story