சாலையில் நடந்து சென்ற தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி செல்போன், பணம் பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
தர்மபுரி சோகத்தூர் கூட்டுரோடு அருகே உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முத்து மரிய ஜோசப் (வயது 29). இவர் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் பணி தொடர்பாக வெளியூருக்கு சென்று விட்டு தர்மபுரிக்கு வந்தார். அங்கிருந்து சோகத்தூர் கூட்டுரோடு பகுதிக்கு டவுன் பஸ்சில் சென்ற அவர் அங்கிருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்த 4 பேர், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.400-ஐ பறித்து கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்து மரிய ஜோசப் இது குறித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.