மூலிமங்கலம் குப்பை கிடங்கில் தீ விபத்து
மூலிமங்கலம் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் காகித ஆலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் சேகரித்து அந்த குப்பைகளை மூலிமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். அந்த குப்பை கிடங்கில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில் நேற்று இரவு குப்பை கிடங்கில் இருந்த குப்பைகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து தீ மளமளவென வேகமாக எரிய ஆரம்பித்ததை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து புகழூர் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தினர். தகவலின் பேரில் நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் மற்றும் துணைத் தலைவர் பிரதாபன் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு உடனடியாக வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி மேலும் தீ அருகாமையில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.