ஆண் குழந்தை இல்லாத விரக்தியில் பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை


ஆண் குழந்தை இல்லாத விரக்தியில்  பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து   கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை
x

ஆண் குழந்தை இல்லாத விரக்தியில் பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சேலம்

சேலம்:

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்தார்

சேலம் இரும்பாலை அருகே உள்ள வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் அதே பகுதியில் வெள்ளிப்பட்டறை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி கோமதி (வயது 25). இவர்களுக்கு மகாலட்சுமி (3½), கவுசிகா ஸ்ரீ (1½) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.

இருப்பினும் ஆண் குழந்தை இல்லையே என்ற விரக்தியில் கோமதி காணப்பட்டார். இந்த நிலையில் கோமதி தனது குழந்தைகளுடன் பெருமாம்பட்டி கில்லன் வட்டம் பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

மேலும் ஆண் குழந்தை இல்லாத விரக்தியில் கோமதி தனது பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி கோமதி தனது குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து அவரும் குடித்தார்.

ஆயுள் தண்டனை

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி குழந்தை கவுசிகா ஸ்ரீ பரிதாபமாக இறந்தாள். கோமதியும், மகாலட்சுமியும் உயிர் பிழைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி குழந்தையை கொன்ற கோமதி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் குழந்தையை கொன்ற குற்றத்திற்காக கோமதிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்து நீதிபதி ஜெகநாதன் தீர்ப்பு அளித்தார்.


Next Story