கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி
நாகை,திருமருகல் பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு சென்றனர்.
திட்டச்சேரி:
நாகை,திருமருகல் பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு சென்றனர்.
பனிப்பொழிவு
தமிழகத்தில் கார்த்திகை, மார்கழி, தை மாதங்கள் பனிக்காலமாகும். தை மாதத்தில் இருந்து பனியின் தாக்கம் மெல்ல மெல்ல குறையும். ஆனால் திருமருகல் பகுதிகளில் வழக்கத்தை விட பனியின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் இரவு முதல் அதிகாலை வரை கடுங்குளிர் நிலவி வருகிறது. இரவு 9 மணிக்கு மேல் தொடங்கும் குளிர் காலை 8 மணி வரை நீடிக்கிறது. இதனால் இரவு 10 மணிக்கு பிறகு சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து வருகிறது.
புகைமூட்டம்
நேற்று காலை பனிமூட்டம் காணப்பட்டது.காலை 8 மணி வரை வெள்ளை நிற புகை மூட்டம் போல் காணப்படுகிறது. சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியவில்லை அந்த அளவுக்கு பனிமூட்டம் இருந்தது.
இதனால் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றதை பார்க்க முடிந்தது. அதேபோல் குடியிருப்பு பகுதிகளில் எதிரே உள்ள வீடு தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்பட்டது.
வாகன ஓட்டிகள் அவதி
காலை 8 மணிக்கு பிறகே பனிமூட்டம் குறைந்தது. விளைநிலங்கள் உள்ள பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது.இந்த பனிப்பொழிவால் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி சென்றவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.பனிப்பொழிவில் இருந்து தப்பிக்க நடைப்பயிற்சி சென்றவர்கள் ஸ்வெட்டர், மப்ளர் போன்றவற்றை அணிந்து சென்றனர்.
நாகை
நாகையில் கடந்த 4 நாட்களாக பருவம் தவறிய கனமழை பெய்து வந்தது. மழை விட்டு 2 நாட்களாக வெயில் அடித்து வருகிறது. அதே போல நேற்று அதிகாலை நாகையில் வழக்கத்தை விட பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 7 மணிக்கு மேல் தொடங்கும் குளிர் மறுநாள் காலை 8 மணி வரை நீடிக்கிறது.
நாகை அக்கரைப்பேட்டை மேம்பாலத்தில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி மூடுபனி தென்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி சென்றது. மூடுபனி காரணமாக தாமரை குளத்தின் மறுகரை தெரியவில்லை. நாகை புதிய கடற்கரையில் அதிகாலையில் 100-க்கும் மேற்பட்டோர் உடற்பயிற்சி செய்வது வழக்கம். கடந்த 2 நாட்களாக நாகையில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி சென்றவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது.