சேறும், சகதியுமான மண் சாலை


சேறும், சகதியுமான மண் சாலை
x

கூடலூர் அருகே தொடர் மழையால் சேறும், சகதியுமாக மண் சாலை மாறியது. எனவே தார்சாலை அமைக்க வேண்டும் என்று ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் அருகே தொடர் மழையால் சேறும், சகதியுமாக மண் சாலை மாறியது. எனவே தார்சாலை அமைக்க வேண்டும் என்று ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

தார் சாலை இல்லை

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மச்சிகொல்லி, பேபி நகர், மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் பேபி நகரில் இருந்து செம்பக்கொல்லி வழியாக போஸ்பாராவுக்கு மண் சாலை செல்கிறது. இந்த சாலையை செம்பக்கொல்லி, தர்ப்பக்கொல்லி உள்ளிட்ட கிராம ஆதிவாசி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக தார் சாலை வசதி இல்லை. இதனால் மண் சாலையை ஆதிவாசி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யும். இதனால் மண் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர காலங்களில் வாகனங்களில் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

சேறும், சகதியுமானது

இதனால் தார் சாலை வசதி செய்து தர வேண்டும் என ஆதிவாசி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக தேவர்சோலை பேரூராட்சி தொடங்கி மாவட்ட நிர்வாகம் வரை ஆதிவாசி மக்கள் மனுக்கள் அளித்தனர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் சேற்றில் நடந்து சென்று வருகின்றனர்.

இதுகுறித்து செம்பக்கொல்லி ஆதிவாசி மக்கள் கூறியதாவது:-

பல தலைமுறைகளாக வசித்து வருகின்ற நிலையில், இதுவரை தார் சாலை வசதி செய்து கொடுக்கவில்லை. ஒவ்வொரு மழைக்காலத்திலும் சேறும் சகதியுமான மண் சாலையில் நடக்க வேண்டிய அவல நிலை உள்ளது. வாகனங்கள் வந்தாலும் சேற்றில் சிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் சுமார் 700 குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர்.

வாகனங்கள் வருவது இல்லை

பேபி நகர் தொடங்கி செம்பக்கொல்லி, போஸ்பாரா வரை 4 கிலோ மீட்டர் தூரம் மண் சாலையாக இருக்கிறது. அவசர காலங்களில் நோயாளிகள், கர்ப்பிணிகளை அழைத்து செல்வதற்கு வாகனங்களும் வருவதில்லை. இதனால் நடந்து சென்று வர வேண்டி உள்ளது.

எனவே, தார் சாலை வசதி செய்து தர அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்


Next Story