வெப்படை அருகே, காரில் கடத்தப்பட்ட கொ.ம.தே.க. நிர்வாகியை கொன்று உடலை ஏரியில் வீசிய கொடூரம் 3 பேர் கைது


வெப்படை அருகே, காரில் கடத்தப்பட்ட   கொ.ம.தே.க. நிர்வாகியை கொன்று  உடலை ஏரியில் வீசிய கொடூரம்  3 பேர் கைது
x

வெப்படை அருகே காரில் கடத்தப்பட்ட கொ.ம.தே.க. நிர்வாகி கொலை செய்யப்பட்டு அவரது உடல் ஏரியில் வீசப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்:

வெப்படை அருகே காரில் கடத்தப்பட்ட கொ.ம.தே.க. நிர்வாகி கொலை செய்யப்பட்டு அவரது உடல் ஏரியில் வீசப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொ.ம.தே.க. நிர்வாகி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை பாதரை செட்டுக்காரன் தோட்டம் பகுதிைய சேர்ந்தவர் கவுதம் (வயது 36). இவருடைய மனைவி திவ்யபாரதி (29). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளாள். கவுதம் வெப்படையில் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். மேலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவராகவும் இருந்து வந்தார்.

இவரது அலுவலகத்தில் குணசேகரன் (29), பிரகாஷ் (28) ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் 2 பேரும் அடிக்கடி வசூல் பணத்தை கையாடல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை கவுதம் கண்டித்துள்ளார். மேலும் தீபன் (29) என்பவரும் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்ததோடு, கவுதமிடம் பணம் கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்காமல் கடந்த 6 மாதங்களுக்கு முன் வேலையில் இருந்து நின்று விட்டதாக தெரிகிறது.

காரில் கடத்தல்

இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி இரவு கவுதம் நிறுவனத்தை பூட்டி விட்டு பாதரையில் உள்ள வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு இருள்சூழ்ந்த பகுதியில் மறைந்திருந்த மர்மநபர்கள் கவுதம் கண்ணில் மிளகாய் பொடியை தூவி தாங்கள் வந்த காரில் அவரை கடத்தி சென்றனர்.

அப்போது கவுதம் தனது மனைவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு நகை, பணத்தை எடுத்து பையில் போட்டு வைத்து தான் அனுப்பும் நபரிடம் கொடுத்து அனுப்பும்படி கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். பின்னர் அந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதுகுறித்து திவ்யபாரதி அளித்த புகாரின்பேரில் வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

குத்திக்கொலை

மேலும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் துப்புதுலக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, கவுதமை கடத்தி சென்ற கார் சங்ககிரி சுங்கச்சாவடியை கடந்து சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சங்ககிரி போலீஸ் எல்லைக்குட்பட்ட வைகுந்தம் மேட்டுக்காடு கோழிப்பண்ணை அருகில் உள்ள ஏரி பகுதியில் உடலில் பலத்த காயங்களுடன் ஆண் ஒருவரின் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

இதில் கொலையுண்டு கிடந்தவர் கொ.ம.தே.க. நிர்வாகி கவுதம் என்பது தெரியவந்தது. அவரது உடலில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இதனால் கவுதமை கத்தியால் குத்திக்கொன்ற மர்மநபர்கள் அவரது உடலை ஏரி அருகே உள்ள புதருக்குள் வீசி சென்றது தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து போலீசார் கவுதமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் அவரது உடலை பார்த்து மனைவி திவ்யபாரதி கதறி அழுதது உருக்கமாக இருந்தது..

இந்த பயங்கர கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில் நாமக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சேகர், நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி, மற்றும் குமாரபாளையம், பள்ளிபாளையம் மற்றும் வெப்படை போலீசார் விசாரணை நடத்தி நிதிநிறுவனத்தில் பணிபுரிந்த குணசேகரன், பிரகாஷ், தீபன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களிடம் விசாரணை முடிந்த பின்னரே கவுதம் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். காரில் கடத்தப்பட்ட கொ.ம.தே.க. நிர்வாகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் வெப்படை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெப்படை போலீஸ் நிலையம் முற்றுகை

கொ.ம.தே.க. நிர்வாகி கவுதம் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவருடைய உறவினர்கள் மற்றும் கொ.ம.தே.க. கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், சம்பவத்தை கண்டித்தும் நேற்று காலை வெப்படை போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். எனினும் பாதரை, வெப்படை பகுதிகளில் போலீசார் அதிகளவில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story