காலி குடங்களுடன் கிராமமக்கள் முற்றுகை


காலி குடங்களுடன் கிராமமக்கள் முற்றுகை
x

குடிநீர் வசதி செய்துதரக்கோரி சாம்பகுளம் பகுதி மக்கள் காலிகுடங்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்


குடிநீர் வசதி செய்துதரக்கோரி சாம்பகுளம் பகுதி மக்கள் காலிகுடங்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மனு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது சாம்பகுளம். இந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் தலையில் காலி குடங்களை ஏந்தியராறு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. குளத்தில் உள்ள தண்ணீர் பயன்படுத்த முடியாத வகையில் சேறும் சகதியுமாக உள்ளது. அதனை வடிகட்டி ஒருகுடம் குடிப்பதற்குள் பொழுதாகி விடுகிறது.

அந்த தண்ணீரை குடிப்பதால் வயிற்றுபோக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வருகிறோம். இதன்காரணமாக வேறு வழியின்றி ஒரு குடம் தண்ணீர் ரூ.12 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். குடிநீர் கேட்டு பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

நடவடிக்கை

எங்களின் அவதியை போக்க உடனடியாக குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும். சாம்பகுளம் பகுதியில் போதிய அளவு மின்விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும். கோடாங்கி ஊருணிக்கு படித்துறை மற்றும் சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும். திருவள்ளுவர் நகர் பகுதிக்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி எங்கள் பகுதியின் அவலநிலையை போக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story