கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தில் முற்றுகை


கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தில் முற்றுகை
x

பொதுமயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம்

தொண்டி,

பொதுமயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

முற்றுகை

திருவாடானை தாலுகா முகில்தகம் பெரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் கிராமத்தில் உள்ள பொதுமயானத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதை அகற்றிதர வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை திருவாடானை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தாசில்தார் செந்தில்வேல் முருகனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து தங்களது ஊரில் உள்ள பொது மயானத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை உடனடியாக அகற்றித்தர உரிய நடவடிக்கை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் செந்தில் வேல்முருகன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு கிராம கணக்குகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதுகுறித்து முகில்தகம் பெரிய குடியிருப்பு கிராம தலைவர் பார்த்திபன் மற்றும் கிராம பொதுமக்கள் கூறியதாவது:- முகில்தகம் பெரிய குடியிருப்பு கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வரும் கிறிஸ்தவ மயானம் உள்ளது. இதில் ஏராளமான கல்லறைகளும் கட்டப்பட்டு உள்ளது.

உறுதி

தற்போது எங்கள் கிராமத்தை சேர்ந்த சிலர் மயானம் உள்ள பகுதியில் கூரை கொட்டகை கட்டி பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இது தொடர்பாக கிராம பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மயானம் இருக்கும் இடத்தை வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் அளவை செய்தோம். அப்போது ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்கள் ஒரு ஆண்டுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றுவதாக உறுதி அளித்தனர். ஆனால் தற்போது வரை ஆக்கிரமிப்பு செய்திருப்பதை அகற்றிக் கொள்ளவில்லை. தற்போது அவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் இடத்திற்கு பட்டா வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடவடிக்கை

எனவே பொது மயானம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக அகற்றி தர வேண்டும் என வலியுறுத்தி தாசில்தாரிடம் நேரில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தி உள்ளோம். தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story