மதுரையில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு இயக்கம்


மதுரையில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு இயக்கம்
x

மதுரையில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு இயக்கத்தை கலெக்டர் அனிஷ்சேகர் தொடங்கி வைத்தார்.

மதுரை

மதுரையில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு இயக்கத்தை கலெக்டர் அனிஷ்சேகர் தொடங்கி வைத்தார்.

கிராம சபை கூட்டம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மே தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராமசபைக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், சிவரகோட்டை கிராம ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் கலெக்டர் அனிஷ் சேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அதில் கூடுதல் கலெக்டர் சரவணன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் விவேகானந்தன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, மாவட்ட திட்ட அலுவலர் காளிதாஸ், கள்ளிக்குடி ஊராட்சிக்குழு தலைவர் மீனாட்சி, சிவரக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத்திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராமசாலைத்திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல்ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் போன்ற கூட்டப்பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அந்த கிராமத்தில் நம்ம ஊரு சூப்பரு என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் அனிஷ்சேகர் தொடங்கி வைத்து பேசினார்.

குப்பைகள் அகற்றுதல்

அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு பிரசாரம் இன்று (நேற்று) முதல் அடுத்த மாதம் (ஜூன்) 15-ந் தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளது. இதன் முக்கிய நோக்கம் மதுரை மாவட்டத்தில் உள்ள 420 கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் கழிப்பறை பயன்பாட்டினை உறுதி செய்து பாதுகாப்பான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகும். மேலும் அதன் மூலம் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி கழிவுகளை தடை செய்தல், பொதுமக்களிடம் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கிட வலியுறுத்துதல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகும்.

அதோடு பொது இடங்களில் உள்ள குப்பைகளை அகற்றுதல், அரசு அலுவலகங்களை தூய்மைப்படுத்துதல், சுற்றுலாத்தலங்கள், மதவழிப்பாட்டுத்தலங்கள், குளம் மற்றும் கண்மாய்கள், நீர்வரத்துகால்வாய்கள் தூய்மைப்படுத்துதல், அனைத்து கிராமங்களையும் தூய்மையான பசுமையான கிராமங்களாக மாற்றுதல் ஆகியவை இதன் முக்கியமான நோக்கங்கள் ஆகும். அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் பங்கேற்புடன் நம்ம ஊரு சூப்பரு பிரசாரம் சிறப்பாக செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story