கோபி அருகே 60 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வேன்
கோபி அருகே 60 அடி ஆழ கிணற்றுக்குள் சரக்கு வேன் பாய்ந்தது. டிரைவா் உயிருடன் மீட்கப்பட்டாா்.
கடத்தூர்
கோபி அருகே 60 அடி ஆழ கிணற்றுக்குள் சரக்கு வேன் பாய்ந்தது. இதில் சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
கிணற்றுக்குள் பாய்ந்தது
கோபி அருகே உள்ள திங்களூர் நடுப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63). இவர் சரக்கு வேன் வைத்து ஓட்டி வருகிறார். கோபி அருகே உள்ள கெட்டிச்செவியூரில் இருந்து சரக்கு வேனில் தேங்காய் பாரம் ஏற்றிக்கொண்டு வடுகபாளையத்துக்கு சென்றார். பின்னர் அங்கு தேங்காய் பாரத்தை இறக்கி வைத்து விட்டு மீண்டும் திங்களூருக்கு சென்றார். திங்களூர் அருகே ஆவாரங்காட்டூர் பிரிவு பகுதிக்கு சென்ற அவர் அங்குள்ள மதுக்கடையில் மதுபாட்டில் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் மதுவை குடித்துவிட்டு சரக்கு வேனை அந்த பகுதியில் திருப்பி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் உள்ள 60 அடி ஆழ கிணற்றுக்குள் சரக்கு வேன் பாய்ந்தது.
மீட்பு
இதை கண்டதும் அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோபி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜேந்திரனை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட அவர் திங்களூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் சம்பவ இடத்துக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு கிணற்றுக்குள் இருந்து சரக்கு வேனும் மீட்கப்பட்டது.
இதுகுறித்து திங்களூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.