கொடுமுடி அருகே சாலையோரத்தில் கார் குப்புற கவிழ்ந்து விபத்து
கொடுமுடி அருகே சாலையோரத்தில் கார் குப்புற கவிழ்ந்து விபத்தில் புதுமண தம்பதி உயிர் தப்பினர்.
கொடுமுடி
நாமக்கல் மாவட்டம் சோழசிராமணியை சேர்ந்த மருத்துவர் பாலாஜி (வயது 30). இவருடைய மனைவி சுகன்யா (29). 2 பேரும் புதுமண தம்பதி ஆவர். பாலாஜியின் தம்பி வெங்கடரமணன். இவர்கள் 3 பேரும் ஒரு காரில் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே பாரப்பாளையத்தில் உள்ள பாலாஜியின் மாமனார் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து சோழசிராமணிக்கு நேற்று காரில் திரும்பி கொண்டிருந்தனர்.
ஈரோடு- கரூர் சாலையில் காலை 10 மணி அளவில் கொடுமுடிைய அடுத்த சோளக்காளிபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள சுவற்றின் மீது கார் மோதி குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த 3 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். உடனே அவர்கள் 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.