பெரியகுளம் அருகே ஆசிரியை வீட்டில் திருடிய 3 பேர் சிக்கினர்
பெரியகுளம் அருகே ஆசிரியை வீட்டில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சுமதி. இவர், பெரியகுளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர், குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து அங்கு இருந்த 6½ பவுன் நகையை மர்ம கும்பல் திருடி சென்றது.
இதுகுறித்து சுமதி தென்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில், சுமதி வீட்டில் திருடியது அழகர்சாமிபுரத்தை சேர்ந்த புவனேஸ்வரன் (வயது 24), சந்தானம் மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 சிறுவர்கள், புவனேஸ்வரன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். சந்தானத்தை தேடி வருகின்றனர்.