உத்தமபாளையம் அருகே கார் மீது மோத முயன்ற தனியார் பஸ் : நீதிபதி உயிர் தப்பினார்
உத்தமபாளையம் அருகே கார் மீது தனியார் பஸ் மோத முயன்ற விபத்தில் நீதிபதி உயிர் தப்பினார்.
தேனி,
தேனியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர், உத்தமபாளையம் ஒருங்கிணைந்த கோர்ட்டில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர், கோர்ட்டு பணிகளை முடித்து விட்டு காரில் தேனிக்கு வந்து கொண்டிருந்தார். அவரது அலுவலக உதவியாளரான ராஜசேகரன் என்பவர் காரை ஓட்டி சென்றார். உத்தமபாளையம் அருகே உள்ள பழைய தென்னஞ் சாலை அருகே கார் வந்தது.
அப்போது தேனியில் இருந்து கம்பம் நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக நீதிபதியின் கார் மீது மோத முயன்றது. இதைக்கண்டதும் காரின் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு சாலையோர பள்ளத்தில் காரை இறக்கினார். இதனால் கண் இமைக்கும் நேரத்தில் நடக்க இருந்த விபத்து தவிர்க்கப்பட்டு நீதிபதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் ராஜசேகர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.