விருதுநகர் அருகே அரசு பள்ளிக்கூட குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு


விருதுநகர் அருகே அரசு பள்ளிக்கூட குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு
x

அரசு பள்ளிக்கூட குடிநீர் தொட்டியில் சாணம் கலந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்


அரசு பள்ளிக்கூட குடிநீர் தொட்டியில் சாணம் கலந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு நடுநிலைப்பள்ளி

விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் யூனியன் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியையாக (பொறுப்பு) சித்ரா பணியாற்றி வருகிறார்.

பள்ளியில் காலை சிற்றுண்டியை மகளிர் சுய உதவிக்குழுவினரும், மதிய சத்துணவை சத்துணவு பணியாளர்களும் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

சமையல் பணிக்காகவும், பள்ளிக்கூட குழந்தைகள் பயன்பாட்டுக்காகவும் பள்ளி வளாகத்தில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று காலையில் சிற்றுண்டி தயாரிக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் குடிநீர் எடுத்தபோது துர்நாற்றம் வீசியது.

சாணம் கலப்பு

இதையடுத்து அவர்கள் தொட்டியை திறந்து பார்த்தனர். அப்போது அதில் சாணம் கலந்திருந்தது தெரிய வந்தது.

உடனடியாக தண்ணீரை வெளியேற்றி குடிநீர் தொட்டி சுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் தண்ணீர் நிரப்பப்பட்டது.

பின்னர் ஊழியர்கள் நடந்த சம்பவம் குறித்து இரவில் கிராம மக்களிடம் தெரிவித்தனர். மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி என்பதால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.. ஆனாலும் நேற்று முன்தினம் காலை கிராம மக்கள் பள்ளிக்கு வந்து தொட்டியை பார்வையிட்டனர்.

அப்போது, 2-வது முறையாக குடிநீர் தொட்டியில் சாணம் கலந்திருப்பது தெரிய வந்தது. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து குடிநீர் தொட்டி பிளீச்சிங் பவுடரால் சுத்தம் செய்யப்பட்டது.

பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விருதுநகர் துணை சூப்பிரண்டு பவித்ரா, தாசில்தார் பாஸ்கரன், ஊரக வளர்ச்சி துறை அதிகாரி முருகன், யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சீனிவாசன், கற்பகவல்லி ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பள்ளிக்கூடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

பள்ளிக்கூடத்தில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் இருந்த சாணம் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு, சத்துணவு அறைக்குள்ளேயே புதிதாக குடிநீர் தொட்டி வைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டியில் சாணம் கலந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வழக்குப்பதிவு

இந்தநிலையில் பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா விருதுநகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

பள்ளியில் காலை உணவு தயாரிக்கும் முத்துலட்சுமி, அங்கம்மாள் ஆகியோர் பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியை பார்த்தபோது அதில் மாட்டு சாணம் கலந்து இருந்தது தெரியவந்தது. இதுபற்றி ஊர் பெரியவர்களிடமும், பஞ்சாயத்து தலைவரிடமும் தெரிவித்துள்ளனர். எனவே இது தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும், மாணவ-மாணவிகள் பயன்பாட்டில் உள்ள குடிநீர் தொட்டியில் சாணம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வேங்கைவயல் சம்பவத்தை நினைவுபடுத்துவது போல் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Related Tags :
Next Story