4 மையங்களில் நடந்த 'நீட்' தேர்வு; 2 ஆயிரத்து 697 பேர் எழுதினர்


4 மையங்களில் நடந்த நீட் தேர்வு; 2 ஆயிரத்து 697 பேர் எழுதினர்
x

திண்டுக்கல் மாவட்டத்தில் 4 மையங்களில் நடந்த 'நீட்' தேர்வை 2 ஆயிரத்து 697 பேர் எழுதினர்.

திண்டுக்கல்

'நீட்' தேர்வு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ஒவ்வொரு ஆண்டும் 'நீட்' தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. தமிழகத்தில் 'நீட்' தேர்வை ரத்து செய்ய அரசு சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகள் 'நீட்' தேர்வு எழுதினர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 930 பேர் 'நீட்' தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவர்களுக்கு பார்வதீஸ் கலை-அறிவியல் கல்லூரி, நத்தம் என்.பி.ஆர். கலை-அறிவியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி, திண்டுக்கல் பிரசித்தி வித்யாலயா பள்ளி ஆகியவற்றில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் பார்வதீஸ் கலை-அறிவியல் கல்லூரியில் 936 பேரும், என்.பி.ஆர். கலை-அறிவியல் கல்லூரியில் 698 பேரும், பாலிடெக்னிக் கல்லூரியில் 936 பேரும், திண்டுக்கல் பிரசித்தி வித்யாலயா பள்ளியில் 360 பேரும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை

மேற்கண்ட 4 மையங்களிலும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் காலை 9 மணியில் இருந்தே தேர்வு மையங்களுக்கு மாணவ-மாணவிகள் பெற்றோருடன் வந்து காத்திருந்தனர். பின்னர் மதியம் 12.30 மணி முதல் மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக 'தெர்மல் ஸ்கேனர்' மூலம் தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளின் உடல்வெப்ப நிலையை சோதனை செய்யும் பணியில் தேர்வுக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அதேபோல் மாணவிகள் அணிந்து வந்த ஆபரணங்களையும் கழற்றும்படியும், பின்னல் சடை போடக்கூடாது என்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மாணவிகள் தாங்கள் அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு தேர்வு மையங்களுக்குள் செல்ல முயன்றனர்.

233 பேர் வரவில்லை

அப்போது பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் நெற்றியில் உச்சிமுகர்ந்து, கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்தி தேர்வு மையங்களுக்குள் அனுப்பி வைத்தனர். அங்கு மாணவ-மாணவிகளின் ஆவணங்களை சரிபார்த்த பின்னரே தேர்வு அறைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. திண்டுக்கல் பார்வதீஸ் கலை-அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் நேற்று 870 பேர் தேர்வு எழுதினர். 66 பேர் தேர்வு எழுத வரவில்லை.

அதேபோல் நத்தம் என்.பி.ஆர். கலை-அறிவியல் கல்லூரியில் 624 பேர் தேர்வு எழுதினர். 74 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. என்.பி.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் 870 பேர் தேர்வு எழுதினர். 66 பேர் தேர்வு எழுத வரவில்லை. பிரசித்தி வித்யாலயா பள்ளியில் 333 பேர் தேர்வு எழுதினர். 27 பேர் தேர்வு எழுதவில்லை.


Next Story