கவர்னருக்கு அழுத்தம் கொடுத்தது போல மத்திய அரசுக்கும் அழுத்தம் தருவோம் - அமைச்சர் எ.வ.வேலு


கவர்னருக்கு அழுத்தம் கொடுத்தது போல மத்திய அரசுக்கும் அழுத்தம் தருவோம் - அமைச்சர் எ.வ.வேலு
x

நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக கவர்னருக்கு அழுத்தம் கொடுத்தது போல, மத்திய அரசுக்கும் அழுத்தம் தருவோம் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

கலைஞர் நினைவு நூலகம்

மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.114 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை-நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நேற்று ேநரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால், மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ.114 கோடி செலவில் 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் கட்டுவதற்கு பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. கட்டுமான பணி 90 சதவீதம் முடிவடைந்து உள்ளது. மீதமுள்ள பணி அடுத்த மாதம் (ஜூன்) இறுதிக்குள் முடிக்கப்படும். அடுத்தக்கட்டமாக நூலக கட்டிடத்தின் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மதுரையில் இப்படி ஒரு நூலகம் அமைவது, கன்னியாகுமரி முதல் மதுரை சுற்றுப்பகுதிகளில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் கல்லூரி-பள்ளி மாணவர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பட்டதாரிகளுக்கு பயன் அளிப்பதாக அமையும்.

அழுத்தம்

கலைஞர் நூலக பணிகள் மட்டுமின்றி அனைத்து அரசு திட்டப்பணிகளும் மிக வேகமாக நடக்கின்றன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதியில், நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். அதன்படி, ஆட்சிப்பொறுப்பேற்ற உடனே எதிர்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி சட்டமன்றத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு இல்லை என்ற நிலை வந்தால்தான் தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும்.

நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்று கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார். அதன்பலனாக தற்போது மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதே போல் மத்திய அரசுக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். நீட் விலக்கு கொண்டு வருவதுதான் முதல்-அமைச்சரின் முக்கிய பணி.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story