நீட் விவகாரம்: ஆகஸ்ட் 20ல் திமுக அணிகள் உண்ணாவிரதம் அறிவிப்பு


நீட் விவகாரம்:  ஆகஸ்ட் 20ல்  திமுக அணிகள் உண்ணாவிரதம் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Aug 2023 12:52 PM IST (Updated: 16 Aug 2023 1:19 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து, ஆகஸ்ட் 20ல் திமுக சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார்.

இந்தநிலையில், திமுக இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து - அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது.

மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசையும், பொறுப்பற்ற கவர்னரையும் கண்டித்து, கழகத் தலைவர் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தி.மு.கழக இளைஞர் அணி மாணவர் அணி மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும், வரும் ஆகஸ்ட் 20 அன்று அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத அறப்போரை நடத்தவுள்ளோம்.

அரியலூர் அனிதாவில் ஆரம்பித்த நீட் மரணம், குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் வரை தொடர்கிறது. செல்வசேகர் அவர்களின் திருவுடலுக்கு மரியாதை செய்யச் சென்றபோது, யாரை தேற்றுவது - யாருக்கு ஆறுதல் சொல்வதென்று கேட்கும் அளவுக்கு அங்கு எல்லோரும் சோகத்தில் உறைந்திருந்தார்கள். நமக்கே அங்கு ஆறுதல் தேவை என்ற நிலை தான் இருந்தது.

இந்த மரணங்கள் அனைத்திற்கும், மத்திய பா.ஜ.க. அரசும் - அவர்களுக்கு அடிமைச்சேவகம் செய்யும் அதிமுகவினரும் - நீட் பாதுகாவலர் கவர்னர் ரவியுமே காரணம்.

நீட் தேர்வுக்கு விலக்கு கேட்க வேண்டும் என்றும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக்கோரியும் அக்டோபர் 4, 2021 அன்று, 12 மாநில முதல்-மந்திரிகளுக்கு நம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்கள். கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதியன்று, முதல்-அமைச்சர் கவர்னரை நேரில் சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமன்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்தினார்.

முதல்-அமைச்சர் அவர்களின் தொடர் அழுத்தம் - பிற அரசியல் கட்சிகளின் அழுத்தம்-பொதுமக்கள்-மாணவர் இயக்கங்களின் போராட்டத்தின் காரணமாக 5 மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 2, 2022 அன்று நீட் விலக்கு மசோதாவினை கவர்னர் ரவி சட்டப்பேரவைக்கே திருப்பி அனுப்பினார்.

மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து, ஆலோசிப்பதற்காக முதல்-அமைச்சர் அவர்கள் தலைமையில், பிப்ரவரி 5, 2022 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தைக் கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் பிப்ரவரி 8, 2022 அன்று மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப வலியுறுத்தி, மார்ச் 15, 2022 அன்று முதல்-அமைச்சர் அவர்கள் கவர்னரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்கள்.

எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வு நடக்கும் என்ற எதேச்சதிகாரப் போக்கில் உள்ள மத்திய அரசையும் - இல்லாத அதிகாரம் இருப்பது போல் மாளிகையில் கொக்கரிக்கும் கவர்னரையும் கண்டித்து, இந்த மாபெரும் உண்ணாவிரதம் தமிழ்நாடெங்கும் நடைபெறவுள்ளது.

கழக இளைஞர் அணி - மாணவர் அணி - மருத்துவ அணி செயலாளர்கள் சென்னையில் நடக்கின்ற உண்ணாவிரத அறப்போரில் பங்கேற்கவுள்ளனர். அதேபோல, தமிழ்நாட்டில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ள இந்த உண்ணாவிரத அறப்போரில் அனைத்துத் தரப்பினரும் திரளாகப் பங்கேற்க அழைக்கின்றோம். நீட் தேர்வை ஒழித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையும் - விலைமதிப்பில்லா உயிரையும் காக்க ஓரணியில் திரள்வோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story