ஆரணி தாலுகா அலுவலகத்தில் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை
கல்குவாரிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து ஆரணி தாலுகா அலுவலகத்தில் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
ஆரணி
ஆரணியை அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்காக அரசு 2019-ம் ஆண்டு ஒப்பந்தம் விடப்பட்டது. அதனை வேலூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஏலம் எடுத்தார்.
ஆனால் இதுவரை அங்கு கல்குவாரி செயல்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்குவாரியில் பாறைகளை உடைக்க ஊழியர்கள் வந்தனர்.
இதற்கு அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இன்று ஆரணி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ரா.மஞ்சுளா தலைமையில் ஏலம் எடுத்தவர் மற்றும் பொதுமக்கள் என இருதரப்பினரும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது சரவணன் கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் என்னால் தொடர்ந்து தொழில் செய்ய முடியவில்லை. ஒப்பந்தம் காலம் விரைவில் முடிகிறது.
ஆகையால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லாமல் நாங்கள் பாறை உடைத்து எடுத்துக் கொள்கிறோம். நாணல் டெக்னாலஜி மூலம் பாறைகளை உடைப்பதால் பாறைகள் வெளியில் சிதறாது. யாருக்கும் பாதிப்பு இருக்காது என்றார். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருதரப்பு முடிவு எட்டப்படாத நிலையில் தாசில்தார் மஞ்சுளா இதுகுறித்து உதவி கலெக்டர் மற்றும் கலெக்டர் ஆகியோரிடம் தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறினார்.