ஏரிகளுக்கு திறந்து விடுவது தொடர்பாக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை


ஏரிகளுக்கு திறந்து விடுவது தொடர்பாக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 13 Oct 2022 7:30 PM GMT (Updated: 13 Oct 2022 7:30 PM GMT)

பஞ்சப்பள்ளி சின்னாறு அணையின் உபரிநீரை பழைய மற்றும் புதிய பாசன பகுதி ஏரிகளுக்கு திறந்து விடுவது குறித்து விவசாயிகளிடம் உதவி கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தர்மபுரி

பஞ்சப்பள்ளி சின்னாறு அணையின் உபரிநீரை பழைய மற்றும் புதிய பாசன பகுதி ஏரிகளுக்கு திறந்து விடுவது குறித்து விவசாயிகளிடம் உதவி கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உபரி நீர்

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக அண்மையில் பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியது. இந்த அணையில் இருந்து கடந்த 45 நாட்களுக்கு முன்பு உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த உபரி நீர் கால்வாய் மூலம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு ஏரிகளுக்கு சென்றது. இதன் தொடர்ச்சியாக தர்மபுரி அருகே உள்ள கடகத்தூர், சோகத்தூர் ஏரிகளுக்கு பஞ்சப்பள்ளி அணையின் உபரி நீர் வரத் தொடங்கியது.

இதற்கிடையே பாப்பாரப்பட்டி, இண்டூர் பகுதிகளில் உள்ள 14 ஏரிகளுக்கு பஞ்சப்பள்ளி அணையின் உபரி நீரை நிரப்பும் வகையில் அமைக்கப்பட்ட கால்வாயில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உபரி நீர் வராததால் அந்த கால்வாயிலும் உபரி நீரை திறக்க வேண்டும் என்று பாப்பாரப்பட்டி, இண்டூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் கடகத்தூர், சோகத்தூர் ஏரிகளுக்கு வந்து கொண்டிருந்த உபரி நீர் அண்மையில் திடீரென நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பழைய பாசன பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடகத்தூர் அருகே திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடைமடை பகுதியில் உள்ள கடகத்தூர், சோகத்தூர், ராமாக்காள் ஏரிகள் நிரம்பிய பிறகு கிளைக்கால்வாயில் உபரி நீரை திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இந்த பிரச்சினை தொடர்பாக பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் சித்ரா விஜயன் தலைமையில் நடந்தது. இதில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பஞ்சப்பள்ளி அணையில் தேவையான அளவில் நீர் இருப்பு உள்ளதால் பாசனப்பகுதி விவசாயிகளை பாதிக்காத வகையில் முறை வைத்து குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஒரு முறை பழைய மற்றும் புதிய கால்வாய்களில் தண்ணீர் விட நடவடிக்கை எடுப்பது, அதன் மூலம் இந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பது என இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.


Next Story