மக்களுக்கும், அரசுக்கும் இடையே பாலமாக மாவட்ட நிர்வாகம் செயல்படும்நாமக்கல் புதிய கலெக்டர் உமா பேட்டி


மக்களுக்கும், அரசுக்கும் இடையே பாலமாக மாவட்ட நிர்வாகம் செயல்படும்நாமக்கல் புதிய கலெக்டர் உமா பேட்டி
x
தினத்தந்தி 22 May 2023 7:00 PM GMT (Updated: 22 May 2023 7:00 PM GMT)
நாமக்கல்

பொதுமக்களுக்கும், அரசுக்கும் இடையே ஒரு பாலமாக மாவட்ட நிர்வாகம் செயல்படும் என நாமக்கல்லில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட கலெக்டர் உமா கூறினார்.

புதிய கலெக்டர் பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ஸ்ரேயா சிங் வேளாண்மைதுறை கூடுதல் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு சுகாதார இயக்கத்தின் திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த டாக்டர் உமா நாமக்கல் புதிய மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று நாமக்கல் வந்து பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசின் ஆணைப்படி மாவட்ட அரசு அலுவலர்களுடன் இணைந்து மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான அனைத்து பணிகளை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடனும், தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும் நல்ல முறையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் தொலைநோக்கு பார்வையோடு பொறுப்பேற்று உள்ளேன்.

பாலமாக செயல்படும்

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் இங்கு விவசாயம் அதிகளவில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கொல்லிமலை போன்ற மலைவாழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அப்பகுதி மக்களுடன் கலந்து ஆலோசித்து அந்தந்த பகுதிக்கு தேவையான வளர்ச்சி பணிகளை ஒரு இலக்கீடு நிர்ணயம் செய்து அதனை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அடைவதற்கு பொதுமக்களுக்கும், அரசுக்கும் இடையே ஒரு பாலமாக மாவட்ட நிர்வாகம் செயல்படும்.

நானும் ஒரு பெண் அதிகாரி என்பதால் பெண்களுடைய முன்னேற்றம், குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு அனைவரிடமும் இணைந்து, ஒரு நல்ல முன்னோடி மாவட்டமாக செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து செயல்படுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பல்வேறு பொறுப்புகள்

இவர் கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுகாதார பணிகள் துணை இயக்குனராகவும், 2015, 2019-ம் ஆண்டு வரை தேசிய நலவாழ்வு குழுமத்தின் (தமிழ்நாடு) இணை இயக்குனராகவும், 2019-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் பயிற்சி கலெக்டராகவும், 2019- 2020-ம் ஆண்டு வரை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சப்-கலெக்டராகவும், 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2021-ம் ஆண்டு வரை ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் கலெக்டராகவும், 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்த்திருத்த திட்டத்தின் திட்ட இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

தூத்துக்குடியை சேர்ந்தவர்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவர், சுகாதாரத்துறையில் இருந்து யு.பி.எஸ்.இ. தேர்வு மூலம் பதவி உயர்வு பெற்று வந்த முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர் நாமக்கல் மாவட்டத்தின் 16-வது கலெக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்ரமணியன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story