கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 2 லட்சம் மலர்ச்செடிகள்


கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 2 லட்சம் மலர்ச்செடிகள்
x
தினத்தந்தி 19 May 2022 6:31 PM GMT (Updated: 19 May 2022 6:37 PM GMT)

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக 2 லட்சம் மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன

திண்டுக்கல்

கலெக்டர் ஆய்வு

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், வருகிற 24-ந்தேதி கோடை விழா தொடங்குகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை கோடை விழா நடைபெறுகிறது. இதேபோல் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. கோடைவிழா, மலர் கண்காட்சி முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வு செய்ய கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் நேற்று கொடைக்கானலுக்கு வருகை தந்தனர்.

இதையடுத்து மலர்கண்காட்சி நடைபெற உள்ள பிரையண்ட் பூங்காவை, கலெக்டர் நேரில் ஆய்வு செய்து தோட்டக்கலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து கோடை விழா குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வன அதிகாரி டாக்டர் திலீப், நகராட்சி ஆணையாளர் நாராயணன், ஆர்.டி.ஓ. முருகேசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) சிவராஜ், விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா, தோட்டக்கலைத்துறை துணை அலுவலர் பாண்டியராஜன், நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், தீயணைப்பு அலுவலர் அன்பழகன், உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்தன் உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் நன்றி கூறினார்.

2 லட்சம் மலர்ச்செடிகள்

கூட்ட முடிவில் கலெக்டர் விசாகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் கோடை விழாவை தொடங்கி வைக்க தமிழக அமைச்சர்கள் 4 பேர் வர உள்ளனர். இதற்காக பிரையண்ட் பூங்காவில் 2 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 1,500 லில்லியம் மலர்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 13 அடி உயரத்தில் கன்னியாகுமரியில் உள்ளது போல திருவள்ளுவர் சிலை மலர்களால் அமைக்கப்பட உள்ளது. அத்துடன் குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக டைனோசர் உருவங்கள், மலர் அலங்கார பாத்திகள் ஆகியவை இடம்பெற உள்ளன.

நாய் கண்காட்சி

நாய் கண்காட்சி, பிளாஸ்டிக் தடை குறித்த கண்காட்சி, படகு போட்டிகள், வாத்து பிடிக்கும் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப்போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். அடுக்கம் சாலையை திறப்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கோடைவிழா குறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், போலீஸ் துறை சார்பில் வாகன நிறுத்துமிடங்கள் கூடுதலாக அமைக்கப்படும். கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் மலை பகுதிகளில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story