விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பலன் இல்லை: பஸ் படிக்கட்டில் தொடரும் ஆபத்தான பயணம்


விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பலன் இல்லை: பஸ் படிக்கட்டில் தொடரும் ஆபத்தான பயணம்
x

கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலும் அரசு மற்றும் தனியார் பஸ்களை போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்பவர்கள் பலரும் பஸ் போக்குவரத்தையே நாடியுள்ளனர். இதனால் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதை ஆங்காங்கே காணமுடியும். குறிப்பாக `பீக் அவர்ஸ்' எனப்படும் நேரங்களில் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.

கரூர்

பயணிகள் கூட்டம்

குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களில் தான் இந்த கூட்டத்தினை காணமுடியும். கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டாலும், அதனையும் தாண்டி பயணிகள் கூட்டம் வருவது தான் சிரமம். இதுபோன்ற நேரங்களில் பஸ்களில் படிக்கட்டுகளில் பயணிகள் பலர் தொங்கியபடியே செல்வதை காணமுடியும். `பஸ்களில் படிக்கட்டில் பயணம் செய்யாதீர்கள்'... `படியில் பயணம் செய்தால் நொடியில் மரணம்'... என பஸ்களில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தாலும், வேறு வழியில்லாமல் ஆபத்தான பயணங்களை சிலர் மேற்கொள்ளத்தான் செய்கின்றனர். இதற்கு யார் மீது குற்றம் சாட்டுவது என்பது கூறமுடியாது.

பஸ்களில் படிக்கட்டில் பயணம் செய்யாமல் கவனித்து கொள்ளும்படி டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டாலும், அவர்கள் சொன்னாலும் பயணிகள் பலர் கேட்பதில்லை. இதுபோன்ற பயணங்களால் சில நேரங்களில் விபரீதம் ஏற்படுகிறது. இதில் அரசு பஸ், தனியார் பஸ் என பாகுபாடு கிடையாது. இது தொடர்பாக கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

படிக்கட்டில் பயணம்

லாலாபேட்டையை அடுத்த புணவாசிப்பட்டியை சேர்ந்த சுரேஷ்:- கரூர் முதல் லாலாப்பேட்டை வரை காலை மற்றும் மாலையில் பள்ளி வேளையில் டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை தவற விட்டால் தனியார் பஸ்சில் பணம் கொடுத்து தான் செல்ல வேண்டும். இதனால் இந்த பஸ்சில் எப்போதும் பயணிகள் கூட்டம் அலைமோதும். இதனால் பள்ளி மாணவர்கள் சிலர் பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு, உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். பஸ் படியில் பயணம் செய்யக்கூடாது என தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பலன் இல்லை. எனவே மாணவர்களின் உயிரை காக்க பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் காலையில் கரூருக்கு வேலைக்கு செல்வோர் பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு செல்கின்றனர். எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் கரூருக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும்.

ஜெகதாபியை சேர்ந்த சொக்கலிங்கம்:-

நான் எனது ஊரில் இருந்து கரூருக்கு அரசு பஸ் மூலம் வேலைக்கு சென்று வருகிறேன். காலையில் 8 மணிக்கு நான் பஸ்சுக்காக காத்திருக்கும் போது பஸ் படிக்கட்டில் பயணிகள் மற்றும் மாணவர்கள் தொங்கி கொண்டு தான் வருகிறார்கள். எங்கள் ஊர் வழியாக செல்லும் பஸ்சில் புலியூர், வெள்ளியணை அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். எனவே ஆபத்தை உணராமல் பஸ் படியில் மாணவ-மாணவிகள் பயணம் செய்வதை தடுக்கவும், வேலைக்கு செல்வோருக்கு பயன்படும் வகையிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும்.

கூட்ட நெரிசல்

கரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி யாழினி ஸ்ரீ:- நான் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறேன். தினமும் எங்கள் ஊரான கோயம்பள்ளியில் இருந்து அரசு பஸ்சில் வந்து செல்கிறேன். பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் புத்தகப்பையுடன் பஸ்சில் ஏறுவது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே என்னை போன்ற மாணவ-மாணவிகள் சிரமம் இன்றி பஸ்சில் செல்ல போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் சஞ்சய்:- நொய்யல், புகழூர், புன்னம்சத்திரம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், காகித ஆலை, வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் அரசு பஸ்களில் சென்று படித்து வருகிறார்கள். ஆனால் பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகளவில் இருப்பதால் மிகவும் சிரமத்துடன் பஸ்களில் சென்று படித்து வருகிறோம். எனவே காலை 8 மணியளவில் கூடுதலாக அரசு பஸ்களை இயக்கினால் சிரமம் இன்றி பள்ளிகளுக்கு செல்வோம்.

மாணவர்களுக்கு சிறப்பு பஸ்

கரூர் அரிகாரம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார்:- எனது குழந்தைகள் தினமும் அரசு பஸ்கள் மூலம் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கின்ற போது மாணவர்கள் புத்தகப்பைகளை சுமந்து கொண்டு ஏறுவது சிரமமாக உள்ளது. எனவே பஸ்களில் பள்ளி குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏற்ற வேண்டும். பள்ளி மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் அவர்களுக்கென்று சிறப்பு பஸ்களை இயக்குவதுடன், மாணவர்களை பள்ளி அருகே இறக்கிவிட்டு, மாலையில் அவர்களை அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா தொற்று

நொய்யல் ஈவேரா பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவி சிந்துஜா:- நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. இந்தநிலையில் கொரோனா தொற்று காரணமாக சில பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள், பல்வேறு நிறுவனங்களுக்கு செல்பவர்கள் இந்த வழியாக செல்லும் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

தோகைமலையை சேர்ந்த ராமமூர்த்தி:- தோகைமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 200-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் கரூர், திருச்சி, மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டிட வேலை மற்றும் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் அரசு பஸ்சை நம்பியே உள்ளனர். இதேபோல் பள்ளி மாணவ-மாணவிகள் இலவச பஸ் பாஸ் மூலம் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். ஆனால் தோகைமலை-குளித்தலைக்கு காலை 8 மணி முதல் 9 மணி வரை சரிவர பஸ் போக்குவரத்து இல்லாததால் பஸ்களில் எப்போதும் கூட்ட நெரிசல் ஏற்படும். இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் செய்து வருகிறார்கள். பஸ் படியில் தொங்கியவாறு பயணம் செய்யக்கூடாது என தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பலன் இல்லை. எனவே தமிழக அரசு தோகைமலை பகுதிக்கு கூடுதலாக 5 பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் வேலன்:- நான் ஆத்தூர் பகுதியில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வருகிறேன். இந்த பஸ் காலை 8.45 மணிக்கு ஆத்தூர் வருகிறது. மறுபடியும் இந்த பஸ்சில் வர வேண்டுமென்றால் 3 மணி நேரம் கழித்து தான் வரும். அதனால் இந்த பஸ்சில் எப்போதும் கூட்டம் அலைமோதும். பள்ளிக்கு சீக்கிரம் வர வேண்டும் என்பதால் சில மாணவர்கள் அபாயத்தை உணராமல் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு செல்கிறார்கள். எனவே இப்பகுதியில் கூடுதலாக 2 பஸ்களை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story