மக்கள் நலனில் அக்கறை இல்லை-வியாபாரம் குறைவாக நடந்த மதுக்கடைகளை மட்டுமே மூடி உள்ளனர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


மக்கள் நலனில் அக்கறை இல்லை-வியாபாரம் குறைவாக நடந்த மதுக்கடைகளை மட்டுமே மூடி உள்ளனர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 Jun 2023 9:20 PM GMT (Updated: 25 Jun 2023 4:59 AM GMT)

மக்கள் நலனில் அக்கறை இல்லை -வியாபாரம் குறைவாக நடந்த மதுக்கடைகளை மட்டுமே மூடி உள்ளனர் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிலையூர், பெரிய ஆலங்குளம், ஒத்த ஆலங்குளம், மேலக்குயில்குடி கீழக்குயில்குடி, உள்ளிட்ட பகுதிகளில் ரூ.2 கோடியில் திட்டபணிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் முன்னிலை வைத்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக. ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார், துணைச் செயலாளர் ஓம்.கே.சந்திரன், நிர்வாகிகள் மேலக்குயில்குடி நாகராஜ், கீழக்குயில்குடி செல்லக்கண்ணு, தனிக்கொடி, சின்னப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியைதொடர்ந்து ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாபோல திரைப்படத் துறையில் இருந்து வந்து அரசியலில் நடிகர்கள் யாரும் சாதித்தில்லை. நடிகர் விஜய் நலத்திட்டங்களை வழங்கி அரசியலுக்கு வருவார் என்பது போல் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நலத்திட்டம் என்பது மக்களுக்கு பொதுவான விஷயம் அதை யாரும் மறுப்பதில்லை, மாணவர்களுக்கு கொடுத்திருக்கிறார். மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கியதை வரவேற்கிறோம். செந்தில் பாலாஜியின் கைதை மறைப்பதற்காக 500 மதுபான கடைகள் மூடப்பட்டாலும் தனியார் மதுபான கடைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. கிளப் என்ற பெயரில் நிறைய மதுக்கடைகளை திறந்துள்ளனர். வியாபாரம் குறைவாக உள்ள கடைகளை கணக்கிட்டு மூடி உள்ளனர். பள்ளிக்கூடம், கோவில்கள் அருகே இருக்கக்கூடிய மதுபான கடைகள் மூடவில்லை. இவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. ஆனால் வெளியில் 500 மதுப்பான கடைகளை பூட்டியதாக அரசியல் செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story