ஓ.பி.எஸ் அதிமுக அலுவலகத்திற்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது - ஜேசிடி.பிரபாகர் பேட்டி


ஓ.பி.எஸ் அதிமுக அலுவலகத்திற்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது - ஜேசிடி.பிரபாகர் பேட்டி
x
தினத்தந்தி 8 Sept 2022 6:44 PM IST (Updated: 8 Sept 2022 6:46 PM IST)
t-max-icont-min-icon

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்திற்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஜேசிடி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

72 நாட்களுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி இன்று வந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு அவரது ஆதரவாளர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன் பின்னர் அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அ.தி.மு.க.வில் பிளவு என்பது கிடையாது. சிலர் துரோகம் செய்தார்கள் அவர்கள் மீது பொதுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நீக்கப்பட்டார்கள். ஓ.பி.எஸ் மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறினார்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திற்குள் செல்வதற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஜேசிடி.பிரபாகர் மனு அளித்துள்ளார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை அலுவலகத்திற்கு செல்ல எந்த சட்ட சிக்கல்களும் இல்லை. அவர் செல்லும் போது சில சமூக விரோதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் எனவே போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும்.


ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்தானதாக நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்திற்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. அதிமுக அலுவலகத்துக்கு ஓ.பி.எஸ். செல்லும் தேதி, விரைவில் அறிவிக்கப்படும். ஓ.பன்னீர்செல்வம் மனம் வருந்தும் படி எடப்பாடி பழனிசாமி பேசுவதை கண்டிக்கிறோம்.


அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக யாருடனோ எடப்பாடி பழனிசாமி ஒப்பந்தம் போட்டுள்ளார். வழக்குகளில் இருந்து தன்னையும் தனது ஆதரவாளர்களையும் பாதுகாத்து கொள்ள திமுகவுடன் ஒப்பந்தம் போட்டு கொண்டு ஒபிஎஸ்-ஐ ஒதுக்குகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story