பெரியபாளையம் அருகே குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


பெரியபாளையம் அருகே குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x

பெரியபாளையம் அருகே குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தண்னீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

தண்ணீர் தேங்கியது

வடகிழக்கு பருவ மழையால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தாழ்வான இடங்களில் மழை நீர் வெளியேற வழி இல்லாததால் குடியிருப்புகளிலும் சாலை ஓரங்களிலும் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், மழை நீருடன், கழிவு நீரும் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ளது.

காக்கவாக்கம் ஊராட்சி

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள காக்கவாக்கம் ஊராட்சியில் கண்ணன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழை நீர் வெளியேற ஊராட்சி நிர்வாகமும், வருவாய் துறை அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாரிகள் நடவடிக்கை

மேலும், ஊத்துக்கோட்டை-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் பெரியபாளையம் அரசுப்பள்ளி எதிரே உள்ள சாலை மற்றும் நெல்வாய் செல்லும் சாலையில் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள சாலையிலும், பெரியபாளையம்-ஆரணி நெடுஞ்சாலையில் பெரியபாளையம் பழைய போலீஸ் நிலையம் அருகே அமைந்துள்ள சாலையிலும், பெரியபாளையம்-புதுவாயல் நெடுஞ்சாலையில் ஆரணி பஸ் நிறுத்தம் அருகே ஏ.டி.எம். மையங்கள் எதிரில் உள்ள சாலை மற்றும் வடமதுரை ஊராட்சியில் அரசு பள்ளி செல்லும் சாலையிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தண்ணீர் தேங்காதவாறு விரைந்து நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story