வயல்களில் வெட்டுக்கிளி தாக்குதலை எளிதாக கட்டுப்படுத்தலாம்
வயல்களில் வெட்டுக்கிளி தாக்குதலை எளிதாக கட்டுப்படுத்தலாம் என வேளாண் உதவி இயக்குனர் சாமிநாதன் கூறினார்.
வயல்களில் வெட்டுக்கிளி தாக்குதலை எளிதாக கட்டுப்படுத்தலாம் என வேளாண் உதவி இயக்குனர் சாமிநாதன் கூறினார்.
நேரடி நெல் விதைப்பு
திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் இந்த ஆண்டு 12 ஆயிரத்து 500 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு மூலம் குறுவை சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேரடி நெல் விதைப்பு வயல்களில் இளம் குருத்துகளை வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தியதாக விவசாயிகள் வேளாண்மை துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வேளாண்மை துறையினர் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் மற்றும் பூச்சியியல் துறை பேராசிரியர் ராதாகிருஷ்ணன் நேற்று திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருவலஞ்சுழி, விளக்குடி, கீரக்களூர் உள்ளிட்ட கிராமங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் உடன் இருந்தார். இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எளிதாக கட்டுப்படுத்தலாம்
வயல்களில் வெட்டுக்கிளியின் தாக்குதல் தென்படுகிறது. வெட்டுக்கிளிகள் கோடை காலத்தில் சாகுபடி செய்யப்படாத வயல்களின் வரப்புகளில் உணவுக்காக தங்கியிருக்கும். தற்சமயம் அத்தகைய வயல்களில் நேரடி விதைப்பு செய்யப்பட்டு, பயிர்கள் முளைத்து வருவதால், வெட்டுக்கிளிகள் இளம் குருத்துகளை சேதப்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் அச்சம் கொள்ள தேவையில்லை.
வயலில் விளக்குப்பொறிகள் வைத்து கண்காணிப்பதன் மூலம் வெட்டுக்கிளிகளை கவர்ந்து இழுத்து எளிதாக கட்டுப்படுத்த முடியும். வெட்டுக்கிளி தாக்குதல் அறிகுறி தென்பட்டால் ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதாவது ஒன்றை 400 மி.லி. கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம். வயல் ஓரங்களிலும், வரப்புகளிலும் உள்ள புதர்களிலும் மருந்து தெளிக்க. பிரபனோ பாஸ் 400 மில்லி அல்லது பிப்ரோனில் 400 மில்லி இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.