வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு
x

வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட திட்ட அலுவலர் சுந்தர்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் நடைபெற்றுவரும் 2 பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து நேற்று நீர் திறக்கப்பட்டு உள்ளதால் விரைவாக பணிகளை செய்து முடிக்க அறிவுறுத்தினார். தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் அமிர்தராயக்கோட்டை கிராமத்தில் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் ரூ.2 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 92 வீடுகள் கட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் தொடங்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் அவற்றை விரைந்து செய்யாத பயனாளிகளிடம், விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அம்பிகாபுரம் கடைத்தெரு வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை அவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வட்டார ஊராட்சி) ஜெயராஜ், (கிராம ஊராட்சிகள்) அன்புச்செல்வன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராஜவேலு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story