நாகை தாசில்தார் அலுவலகத்தில் கதறி அழுத மூதாட்டிகள்


நாகை தாசில்தார் அலுவலகத்தில் கதறி அழுத மூதாட்டிகள்
x

உதவித் தொகை நிறுத்தப்பட்டதால் நாகை தாசில்தார் அலுவலகத்தில் மூதாட்டிகள் கதறி அழுதனர்.

நாகப்பட்டினம்

உதவித் தொகை நிறுத்தப்பட்டதால் நாகை தாசில்தார் அலுவலகத்தில் மூதாட்டிகள் கதறி அழுதனர்.

முதியோர் உதவித்தொகை

நாகை பப்ளிக் ஆபிஸ் சாலையை சேர்ந்த ரோசம்மாள் (வயது 68) என்பவர் உள்பட அந்த பகுதியை சேர்ந்த சில மூதாட்டிகள் நேற்று நாகை தாசில்தார் அலுவலகத்துக்கு வந்தனர்.

தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மீண்டும் உதவித்தொகை வழங்கவேண்டும் எனவும் அங்குள்ள அலுவலர்களிடம் கூறினர். அதற்கு அங்குள்ள அதிகாரிகள் விதிமுறைகள் மீறி வழங்கப்பட்டதால், உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது என தெரித்தனர்.

இதைக்கேட்ட முதியவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கதறி அழுத மூதாட்டிகள்

தங்களுக்கு இனிமேல் உதவித்தொகை கிடைக்காது என்று அறிந்ததும் மூதாட்டிகள் வேதனையில் தாசில்தார் அலுவலகம் முன்பு கதறி அழுதனர். இதுகுறித்து ரோசம்மாள் கூறுகையில், எனக்கு கணவர் கிடையாது. எனது ஒரே மகளை வெளியூரில் திருமணம் செய்து கொடுத்துவிட்டு வீட்டில் தனியாக வசித்து வருகிறேன்.

வேறு வருமானம் இல்லாத எனக்கு, அரசு வழங்கி வந்த முதியோர் உதவித்தொகை பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்த நிலையில் திடீரென அந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதால் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாத நிலையில் அவதிப்பட்டு வருகின்றேன் என அழுதபடி கூறினார்.

பரபரப்பு

உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் நாகை தாசில்தார் அலுவலகத்தில் மூதாட்டிகள் கதறி அழுத சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், நாகை மாவட்டத்தில், நாகை, வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேளூர் ஆகிய 4 தாலுகாக்களில் அரசின் மூலம் பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

உண்மை நிலையை கண்டறிய உத்தரவு

அதன் அடிப்படையில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, விதவை மறுவாழ்வு உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை, முதிர்கன்னி உதவித் தொகை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம், மாவட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்து வந்தனர். அரசின் நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிகளுக்கு சென்றடைகிறதா? போலியான பயனாளிகளுக்கு பணம் செல்கிறதா? என்பது குறித்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்று அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

விதிமுறைகளை மீறி பெறப்பட்டதால் நிறுத்தம்

அதன்படி நடத்தப்பட்ட ஆய்வில், பயனாளிகள் உள்ளூரில் வசிக்கின்றனரா? பயனாளி இரண்டு கியாஸ் இணைப்பு பெற்றுள்ளனரா? பயனாளி பெயரில் சொத்துப்பதிவு இருக்கக்கூடாது. வங்கியில் பயனாளி பெயரில் 5 பவுன் நகை, அவர் பெயரில் மீட்கவோ, அடகு வைத்திருக்கவோ கூடாது உள்ளிட்டவைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

இதில் நாகை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி உதவித்தொகை பெற்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கண்டறியப்பட்டது. அவர்களுக்கு முதியோர் உதவி தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வரும் புகார் மனுக்களை ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.


Next Story