கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில்250 அடி பள்ளத்தில் தவறி விழுந்த பெயிண்டர்:தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்


கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில்250 அடி பள்ளத்தில் தவறி விழுந்த பெயிண்டர்:தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்
x
தினத்தந்தி 18 Aug 2023 6:45 PM GMT (Updated: 18 Aug 2023 6:46 PM GMT)

கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் டம் டம் பாறை அருகே 250 அடி பள்ளத்தில் தவறி விழுந்த பெயிண்டரை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

தேனி

கொடைக்கானலுக்கு சுற்றுலா

கடலூர் மாவட்டம் பி.ஆண்டி குப்பம் ஊரை சேர்ந்தவர் சங்கர் (வயது 41). பெயிண்டர். அதே ஊரை சேர்ந்தவர் பாபு (41). நண்பர்களான இவர்கள் இருவரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 பேரும் பஸ்சில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.

பின்னர் அவர்கள் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொடைக்கானலில் இருந்து பஸ்சில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் டம் டம் பாறை பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றது. அப்போது திடீரென அவர்கள் 2 பேரும் பஸ்சை விட்டு இறங்கினர்.

250 அடி பள்ளம்

பின்னர் அவர்கள் அங்கிருந்து சிறிது தூரம் சாலையில் நடந்து சென்றனர். டம் டம் பாறை கீழே 5-வது வளைவில் அவர்கள் களைப்படைந்தனர். இதையடுத்து 2 பேரும் அங்கு சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சங்கர் சுமார் 250 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பாபு காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறி கூச்சலிட்டார். இதை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் வத்தலக்குண்டு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பள்ளத்தில் இறங்கி சங்கரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பெயிண்டர் மீட்பு

ஆனால் இரவு நேரமானதால் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை தீயணைப்பு படையினர் மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளத்தில் உள்ள முட்புதரில் சிக்கி காயங்களுடன் சங்கர் மயங்கி கிடந்தார். பின்னர் தீயணைப்பு படையினர் அவரை கயிறு கட்டி மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தபோது 250 அடி பள்ளத்தில் பெயிண்டர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story