சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு; கிலோ ரூ.80-க்கு விற்பனை
மழையின் காரணமாக வரத்து குறைவால் சின்ன வெங்காயத்தின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கிலோ ரூ.80-க்கு விற்பனையாகிறது.
சின்ன வெங்காயம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பரவலாக பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சின்ன வெங்காயத்தின் விளைச்சல் சற்று பாதிப்படைந்துள்ளது. இதனால் சந்தைக்கு சின்னவெங்காயம் வரத்து குறைந்துள்ளது. புதுக்கோட்டை உழவர்சந்தைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் அதன் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 10-ந் தேதி சின்ன வெங்காயம் கிலோ ரூ.34-க்கு விற்பனையானது. தற்போது வரத்து குறைவால் கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெளி மார்க்கெட்டிலும், சில்லறை கடைகளிலும் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.
கத்தரிக்காய் கிலோ ரூ.80-க்கு விற்பனை
புதுக்கோட்டை உழவர் சந்தையில் விற்பனையான காய்கறிகள் சிலவற்றின் விலை விவரம் (கிலோவில்) வருமாறு:- தக்காளி ரூ.18-க்கும், வெண்டைக்காய் ரூ.20-க்கும், புடலங்காய் ரூ.20-க்கும், பீர்க்கங்காய் ரூ.40-க்கும், பாகற்காய் ரூ.50-க்கும், சுரைக்காய் ரூ.15-க்கும், கேரட் ரூ.50-க்கும், பீட்ருட் ரூ.40-க்கும், கத்தரிக்காய் ரூ.80-க்கும், அவரைக்காய் ரூ.70-க்கும், பச்சை மிளகாய் ரூ.50-க்கும், பெரிய வெங்காயம் ரூ.50-க்கும் விற்பனையானது.
கத்தரிக்காய் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரைக்கு விற்பனையான நிலையில் அதன் விலை சற்று குறைந்து கிலோ ரூ.80-க்கு விற்பனையாகிறது.