கோவிலுக்குள் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
ஜலகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலுக்குள் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 600 போலீசார் ஈடுபட உள்ளனர்.
ஜலகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலுக்குள் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 600 போலீசார் ஈடுபட உள்ளனர்.
கும்பாபிஷேகம்
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கோவில் வளாகம் மற்றும் உள்புறங்களில் மின்விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோபுரங்களும் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
இதுதவிர கோவில் வளாகங்கள் முழுவதும் பூக்களாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், கலச பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று முதல்கால யாக பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து இன்று காலை 2-ம் கால யாக பூஜை நடந்தது. அனைத்து மூர்த்திகளுக்கும் அஷ்டபந்தன சமர்ப்பணம், ஸ்ரீஜலகண்டேஸ்வரருக்கு சொர்ணபந்தன சமர்ப்பணம் நடைபெற்றது.
சக்திஅம்மா பங்கேற்பு
இந்த யாக பூஜையில் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சக்தி அம்மா, கலவை சச்சிதானந்த சுவாமிகள், ஐகோர்ட்டு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஆதினங்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சக்தி அம்மா பேசியதாவது:-
ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வது நமக்கு கிடைக்க பெருமை. கும்பாபிஷேகம் மூலம் தெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்கும்.
கலசத்தில் உள்ள தண்ணீர் யாகசாலை பூஜைக்கு பின்னர் தீர்த்தமாகிறது. எப்படி தண்ணீர் தீர்த்தமாகிறது. தொடர்ந்து மந்திரங்கள் கூறுவதால் சாதாரண நீர் தெய்வத்தின் சக்தியால் தீர்த்தமாகிறது. மந்திரங்களுக்கும், வார்த்தைகளுக்கும் வித்தியாசம் உள்ளது.
வார்த்தையானது நாம் பேசும் போது வெறும் சத்தம் தான் வெளிவரும். ஆனால் மந்திரத்தில் தான் சத்தத்துடன் சக்தியும் வெளிவரும். தெய்வசக்தி தரும் வார்த்தைகள் தான் மந்திரமாகும்.
மந்திரங்களுக்கு உண்டான சக்தியானது கலசத்தில் இறங்கும். கோபுரத்தில் உள்ள கலசநீரை சாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அந்த சக்தி, சாமிக்கு செல்லும். கும்பாபிஷேகத்தின் போது அப்பகுதி முழுவதும் அருள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு, தங்கக்கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, நாராயணி பீட மேலாளர் சம்பத், தர்மஸ்தாபனம் செயலாளர் சுரேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர். சொர்ண பந்தனத்துக்காக சக்தி அம்மா சார்பில் தங்கம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
5 ஆயிரம் பக்தர்கள்
கோவிலில் தொடர்ந்து மாலை 3-ம் கால யாக பூஜை நடைபெற்றது.
கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பார்வையிட்டார். கும்பாபிஷேகத்தையொட்டி 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாளை காலை 5 மணிக்கு 4-ம் காலயாக பூஜையும், 9 மணிக்கு நான்காம் கால மஹா பூர்ணாஹூதி, பட்டு வஸ்த்ர சமர்ப்பணம் தீபாராதனை யாத்ராதானம், கடம் புறப்பாடு நடைபெறுகிறது. 9.30 மணிக்கு புதிய தங்க தேர் மற்றும் ராஜகோபுரம் மற்றும் விமான கும்பாபிஷேகமும் தொடர்ந்து அனைத்து மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
மாலையில் மகாஅபிஷேகம,் 6 மணிக்கு திருக்கல்யாணம், 8 மணிக்கு திருவீதி உலா நடைபெறும். அதைத்தொடர்ந்து நாளை மறுநாள் முதல் வருகிற 9-ந் தேதி வரை மண்டலாபிஷேகம், பஞ்ச மூர்த்திகள் அபிஷேகமும் நடைபெற உள்ளது.
கோவில் நிர்வாகிகள் கூறுகையில், கும்பாபிஷேகத்தன்று கோவில் உள்பிரகாரத்தில் கீழ் மற்றும் மேற்பகுதியில் 2 ஆயிரம் பக்தர்கள், வெளிபிரகாரத்தில் கீழ் மற்றும் மேற்பகுதியில் 3 ஆயிரம் பக்தர்கள் என 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றனர்.