தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்'


தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்
x

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்' வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் உள்தமிழகம், கேரளா, தெற்கு உள்கர்நாடகா, ராயலசீமா பகுதிகளில் பருவமழை பரவி இருக்கிறது. தமிழகத்தில் இதன் காரணமாக ஆங்காங்கே மழை பெய்தும் வருகிறது.

மேலும் வட இலங்கை கடற்கரை பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 4-ந்தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வருகிற 4-ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை

அதேபோல், திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2-ந்தேதி (நாளை) செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 3 மற்றும் 4-ந்தேதிகளிலும் இதேபோல், சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

அதிகபட்ச மழை

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் ராமேசுவரத்தில் அதிகபட்சமாக 5 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. பரமக்குடியில் 4 செ.மீ. மழையும், கேளம்பாக்கம், தங்கச்சிமடம், மோகனூர், நாமக்கல்லில் தலா 3 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மன்னார் வளைகுடா, தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு 4-ந்தேதி வரை செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


Next Story