பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக மாறும் ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம்


பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக மாறும் ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம்
x

பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக மாறும் ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம்

தஞ்சாவூர்

பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக மாறும் ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரத்தை தமிழக தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

முத்தம்மாள் சத்திரம்

மராட்டியர் ஆட்சி காலத்தில் 20-க்கும் அதிகமான சத்திரங்கள் இருந்தன. பெரும்பாலானவை மராட்டிய மன்னர்களின் மனைவி, காதலிகள், தாய், இஷ்ட தெய்வத்தின் பெயரால் கட்டப்பட்டன. யாத்திரை செல்லும் பொதுமக்களும், பக்தர்களும் தங்கி இளைப்பாறுவதற்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும் கட்டப்பட்ட இந்த சத்திரத்தில் பாகுபாடு இன்றி உணவு வழங்கப்பட்டன.

தஞ்சை மாவட்டத்தில் மராட்டிய மன்னர்களால் கட்டப்பட்ட சத்திரங்களில் முத்தம்மாள் சத்திரம் மிகப்பெரியதாகும். அரண்மனை போல் கட்டப்பட்டுள்ள இந்த சத்திரம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ளது. தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களில், மக்கள் செல்வாக்குடன் இருந்தவர் இரண்டாம் சரபோஜி. இவர், ஓலைச் சுவடிகள், அரிய நூல்களையும் சேகரித்து தஞ்சை அரண்மனை வளாகத்தில் சரசுவதி மகால் நூலகத்தை அமைத்தார்.

சரபோஜி கட்டியது

இவரின் காதலி முத்தம்மாள் என்பவர், தஞ்சையை அடுத்த ஒரத்தநாட்டில் இருந்தார். இவர், அரண்மனை அதிகாரியின் தங்கையாகும். முத்தம்மாள் இறக்கும்போது, 'கர்ப்பிணியருக்கான மருத்துவம், கல்வி, பசிப்போருக்கு உணவு வழங்க வேண்டும். அதற்காக, ஒரு சத்திரம் கட்ட வேண்டும் என வேண்டினார்.

தன் காதலியின் நினைவாக ஒரத்தநாட்டில், 1800-1802-ம் ஆண்டு சரபோஜி கட்டியது தான் முத்தம்மாள் சத்திரம். இந்த பகுதிக்கு அப்போதைய பெயர் முத்தம்மாள்புரம். சரபோஜி மன்னர் இந்த மண்டபத்தை மட்டுமல்லாமல் தஞ்சை-ராமேஸ்வரம் வழித் தடத்தில், ஆன்மிகப் பயணம் மேற்கொள்வோருக்காக தனுஷ்கோடி வரை பல சத்திரங்களை கட்டினார்.

அழகிய தோரண அமைப்பு

அவற்றில் தஞ்சை காஞ்சி வீடு சத்திரம், சிரேயஸ் சத்திரம், சூரக்கோட்டை சைதாம்பாள்புரம் சத்திரம், துறையூர் அன்னசத்திரம், ராசகுமரபாயி சத்திரம், பட்டுக்கோட்டை காசங்குளச் சத்திரம்.மணமேல்குடி திரவுபதாம்பாள்புரம் சத்திரம், மீமிசலில் ராசகுமாரம்பாள் சத்திரம், ராமேஸ்வரத்தில் ராமேஸ்வரம் சத்திரம், தனுஷ்கோடியில் சேதுக்கரை சத்திரம் உள்ளிட்டவை தற்போதும் உள்ளன.

ஒரத்தநாட்டில் உள்ள முத்தம்மாள் சத்திரத்தில் 'ப' வடிவில், அழகிய தோரண அமைப்புடன் யானை, குதிரை பூட்டிய தேர் சக்கர வாயில் பகுதி, தூண்கள் தாங்கி நிற்கும் பெரிய முற்றங்கள், சிவலிங்கங்கள், மேல்தளத்தில் அழகிய வேலைப்பாடுடைய மரத்தூண்கள், நீர் நிறைந்த கிணறு என அழகாக வடிவமைக்கப்பட்டது.

நினைவு சின்னம்

தொடக்கத்தில் சத்திரமாக இருந்த இது, காலப்போக்கில் பள்ளிக்கூடம், மாணவர் விடுதி என செயல்பட்டது. தற்போது, பராமரிப்பின்றி, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. சேதமடைந்த நிலையில் உள்ள இந்த சத்திரத்தை பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக தொல்லியல்துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக மாற்றப்பட உள்ளது.

இதன் முதல்கட்டமாக தமிழக தொல்லியல்துறை அதிகாரிகள் முத்தம்மாள் மண்டபத்தை நேரில் பார்வையிட்டு, இந்த முத்தம்மாள் சத்திரத்திற்கு சொந்தமான நிலப்பகுதியையும் பார்வையிட்டனர். பின்னர் முத்தம்மாள் சத்திரம் குறித்த ஆவணங்களை வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து பெற்று அதை சீரமைத்து நினைவு சின்னமாக்கும் பணியில் தொல்லியல்துறை ஈடுபட்டுள்ளது.

ஆய்வு

அடுத்தகட்டமாக தமிழக தொல்லியல்துறையின் மண்டல உதவி இயக்குனர் தங்கதுரை, தொல்லியல்துறை அதிகாரி சரவணன் மற்றும் பணியாளர் ஒரத்தநாட்டில் உள்ள முத்தம்மாள் சத்திரத்தில் நேற்று ஆய்வு பணியை மேற்கொண்டனர். இவர்கள், தற்போதைய நிலை குறித்து ஒரு விரிவான வரைபடம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த கட்டிடங்களை எவ்வாறு புதுப்பிக்கலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.

இதுகுறித்து தமிழக தொல்லியல்துறை அதிகாரிகள் கூறும்போது, முற்காலத்தில் இந்த கட்டிடம் எது மாதிரியான கட்டிடமாக இருந்தது.

மராட்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடமாக இருந்தாலும் இது பல்வேறு நிலைகளில் மாறுபட்டு வந்துள்ளது. பள்ளியாக செயல்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேயர்கள் தங்குமிடமாகவும் இருந்துள்ளது. இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட அந்த கட்டிடத்தினை பழமை மாறாமல் அந்த நிலையிலேயே பாதுகாக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றனர்.


Next Story