ஊழலுக்கு எதிரான எங்களது போராட்டம் எப்போதும் தொடரும் - அண்ணாமலை பேட்டி
ஊழலுக்கு எதிரான எங்களது போராட்டம் எப்போதும் தொடரும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
மதுரை,
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் நாளை ராமேசுவரத்தில் நடைபயணம் தொடங்குகிறேன். தொடக்க விழாவில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு நடைபயணத்தை தொடங்கிவைக்கிறார். இங்கு தொடக்க விழா மட்டுமே நடைபெறுகிறது.
நாளை மறுநாள் முதல் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு செல்கிறேன். அதன்படி முதல் தொகுதியாக ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபயணம் மேற்கொள்கிறேன். அப்போது பிரதமர் மோடி அரசின் 9 ஆண்டு சாதனைகளை விரிவாக பொதுமக்களிடம் எடுத்துக்கூற இருக்கிறேன்.
வரும் நாட்களில் நடைபெறும் தொடர் நடைபயணத்தின்போது பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மேலும் நடைபயணத்தின் இடையே 10 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டங்களில் மத்திய மந்திரிகள் அனைவரும் கலந்துகொள்ள உள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் அதிக பயனாளர்கள் என்ற அடிப்படையில் அந்தந்த துறை சார்ந்த மந்திரிகள் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமலாக்கத்துறை பற்றி குறை கூறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும். தொட்டுப்பார், சீண்டிப்பார் என்று கூறுவது முதல்-அமைச்சருக்கு அழகு கிடையாது. ஊழலுக்கு எதிரான எங்களது போராட்டம் எப்போதும் தொடரும்.
பாஜகவின் ஆட்சி கால சாதனைகள் குறித்து 1 லட்சம் புத்தகங்கள் விநியோகிக்க உள்ளோம். 168 நாட்களில் 234 தொகுதிகளில் 1,700 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்பதை எடப்பாடி பழனிசாமி இன்னும் உறுதிபடுத்தவில்லை. என்எல்சி விரிவாக்கம் தேவை, ஆனால் அதை முறையாக செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.