ஜாமீனில் வெளிவந்து இடைத்தேர்தலில் போட்டி: வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் தேர்வு
அரசு நிலஅபகரிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் வெற்றி பெற்றார
இடைத்தேர்தல்
தமிழகத்தில் உள்ளாட்சிகளில் காலியாக இருந்த பதவிகளுக்கு கடந்த 9-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. தேனி மாவட்டத்தில், காலியாக இருந்த 9 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் வடபுதுப்பட்டி ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர், மொட்டனூத்து ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர், ரெங்கசமுத்திரம் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர், முத்தாலம்பாறை ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர், தும்மக்குண்டு ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் ஆகிய 5 பதவிகளுக்கு ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ததால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பெரியகுளம் நகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில் அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால், வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், டி.வாடிப்பட்டி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர், சின்னஓவுலாபுரம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் ஆகிய 3 பதவிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடந்தது. வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 10 பேரும், டி.வாடிப்பட்டி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், சின்னஓவுலாபுரம் வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும் என மொத்தம் 15 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று நடந்தது.
வடபுதுப்பட்டி ஊராட்சி
சின்னஓவுலாபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் பதிவான வாக்குகள் சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், மற்ற இரு பதவிகளுக்கு பதிவான வாக்குகள் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் எண்ணப்பட்டது.. வாக்கு எண்ணிக்கை முடிவில் சின்னஓவுலாபும் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினராக லட்சுமிதேவி, டி.வாடிப்பட்டி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினராக ரவி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் மொத்தம் 7,031 வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் 12 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இதில், மூக்கு கண்ணாடி சின்னத்தில் போட்டியிட்ட அன்னப்பிரகாஷ் 4,155 வாக்குகள் பெற்று, 1,793 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஞானமுருகன் 2,362 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். மற்ற 8 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இதையடுத்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி அன்னப்பிரகாசிடம் வழங்கினார்.
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்
வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட அன்னப்பிரகாஷ் பெரியகுளம் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் ஆவார். வடவீரநாயக்கன்பட்டியில் அரசு நிலம் அபகரிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கடந்த பிப்ரவரி மாதம் அவர் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
கடந்த மாதம் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்தபோது, அன்னப்பிரகாஷ் தேனி மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலருடன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அன்னபிரகாசின் மனைவி ஈஸ்வரி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார்.