அரசு தலைமை மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்


அரசு தலைமை மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு: அமைச்சர்  வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்
x

கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிைவ அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

கரூர்

புற நோயாளிகள் சேவை

கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார். இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் (பொறுப்பு) ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கரூர் அரசு மருத்துவமனை 1922-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஏறத்தாழ 100 ஆண்டு கண்ட இந்த அரசு மருத்துவமனை 2020-ம் ஆண்டு மூடப்பட்டது. கரூர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி வருகிற காரணத்தினால் மாவட்டத்தில் இருக்கக்கூடிய தலைமை மருத்துவமனை மூடப்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது.

பொதுமக்கள் கோரிக்கை

இதனால் மருத்துவக்கல்லூரி வருகின்ற போது அதே அரசாணையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக இந்த மருத்துவமனை செயல்படும் என்று வெளியிடப்பட்டிருக்கின்றது. அதற்கு மாறாக அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டதால் மாநகரின் மைய பகுதியில் இருக்கக்கூடிய இந்த அரசு தலைமை மருத்துவமனை மூடப்பட்டது.

இந்த மருத்துவமனையை திறக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, மூடப்பட்ட இந்த அரசு மருத்துவமனை, மாவட்டத்தினுடைய அரசு தலைமை மருத்துவமனையாக கடந்த 2023-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இணையாக குளித்தலையில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணை மருத்துவமனையாக அரசாணை வெளியிடப்பட்டிருக்கின்றன.

ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

குளித்தலை அரசு மருத்துவமனைக்கு 40 கோடி ரூபாய் நிதிஇந்த ஆண்டு ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் உத்தரவுகளை வழங்கி இருக்கிறார். இந்த மூடப்பட்ட அரசு தலைமை மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செயல்படுவதற்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் தன்னுடைய மூன்றாம் ஆண்டு ஆட்சி பயணத்தினுடைய தொடக்க நாளில் மூடப்பட்ட அரசு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. புறநோயாளிகள் பிரிவில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மகளிர் நல மருத்துவம், சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். இது தவிர எக்ஸ்ரே, ஆய்வகம், இ.சி.ஜி., இயன்முறை சிகிச்சை பிரிவு, மருந்தக வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏ.ஆர்.டி சிகிச்சை, காசநோய் சிகிச்சை, பிறந்த குழந்தைகளுக்கான தொடக்கநிலை இடையீட்டு சிகிச்சைகள், சித்தா, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் சிகிச்சை மையம் ஆகியவை இங்கு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பின்னர் தனியார் மகாலில் நடைபெற்ற ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி விழாவில் ரூ.6.75 கோடி மதிப்பீட்டில் 1,237 பயனாளிகளுக்கு பல்வேறு துறை சார்ந்த அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வழங்கினார். தொடர்ந்து மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியினை அமைச்சர் தொடங்கி வைத்தார்.


Next Story