பத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா


பத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
x

சிவகாசி பத்திரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி பத்திரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பத்திரகாளியம்மன்

சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமை பண்டுக்கு சொந்தமான ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.

இந்த கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த 2-ந் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாள் நடைபெறும் சித்திரை பொங்கல் விழாவில் அம்மன் தினமும் ஒரு அலங்காரத்தில் வான வேடிக்கைக்கு பின்னர் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

கரும்புள்ளி-செம்புள்ளி

9-ம் நாள் திருவிழாவான நேற்று கயிறுகுத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக்கொண்டு கையில் வேப்பிலையுடன் வந்தனர். கோவிலில் குவித்து வைக்கப்பட்டிருந்த வேப்பிலையில் உருண்டு எழுந்தனர். இது கோடைக்கால நோய்களில் இருந்து காக்க உதவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

அன்னதானம்

பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், தனியார் அமைப்பினர் அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கினர். பல்வேறு பகுதியில் இருந்தும் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வந்ததால் முக்கிய சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் பக்தர்கள் எவ்வித சிரமும் இன்றி சாமி தரிசனம் செய்தனர். கோவில் அருகில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரிசையை ஒழுங்குபடுத்தினர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story